காத்திருந்தது அந்தக் கல் காலம் காலமாய்
சாத்திரம் போற்றும் நாயகன் காலுக்காய்
வேதமறிந்த முனிவன் தன் கோபத்தில்
பேதையின் நியாயம் மறந்து சபித்தனன்
இந்திரனின் வஞ்சகத்தால் மனம் கல்லாச்சு
சொந்த மணாளனின் சாபத்தால் உடலும் கல்லாச்சு!
வந்தான் ஒரு நன்னாளில் தசரதன் மைந்தனங்கு
தந்தான் மீண்டும் உரு பேதை அகலிகைக்கு
அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் வருந்தினான்
எவளுக்குமே இக்கதி வருவது தவறென்றான்.
ஆண்டுகள் பல கடந்தன,அகலிகை காத்திருந்தாள்
மீண்டும் அப்புண்ணியனைக் கண்களால் காண்பதற்கு
இலங்கையில் போர் வென்று திரும்பும் வழியினிலே
கலங்கிப் பின் மனம் தெளிந்த சீதையுடன் அங்கு வந்தான்
நடந்த நிகழ்வுகளைத் தனித்திருந்த போது வினவ
மடந்தை சீதையும் அனைத்தும் உரைத்தனளே.
தீக்குளித்த கதை கேட்டாள் அகலிகை உடலெல்லாம்
தீயினால் சுட்டது போல் கொடுந்துன்பம் எய்தினாள்
"இராமனா சொன்னான் உன்னைத் தீக்குளிக்க
இராமலே போனதோ நியாயம் அவனிடமும்
தன் மனைவி என்றதுமே நியாயம் வேறாயிற்றோ
என்ன கொடுமையிது "என்றே அரற்றினாள்
பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!
(கரு;புதுமைப் பித்தனின் 'சாப விமோசனம்' சிறுகதை)
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?