Friday 30 September 2011

என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ராசா கேள்வி

 
 
என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
 
மேலும் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக தன் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டை தனியாக விசாரிக்குமாறும் ராசா கோரியுள்ளார்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராசா. அவர் மீது கடந்த வாரம் திடீரென புதிய புகார்களை சுமத்தியது சிபிஐ. அமைச்சர் பதவி வகித்த ராசா அரசு ஊழியர் என்ற வகையில் வருவதால் அவர் மீது நம்பி்க்கை மோசடி குற்றத்தை சாட்டியுள்ளது சிபிஐ.
 
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது. இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந் நிலையில் இப்போது கூறப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராசாவின் ஆட்சேபனை குறித்து அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ கூறும்போது ராசா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டதாக கூறியது. ஆனால் தற்போது ராசா மீது புதிய புகார்களைக் கூறியுள்ளது சிபிஐ. நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்து விட்டன. அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ புதிய புகார்களை கூறியிருப்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றுதான் கருதப்பட வேண்டியுள்ளது.
 
பழைய குற்றச்சாட்டுகளுடன் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டையும் இணைத்தால், பழைய வழக்குகளில் ஜாமீன் பெறுவதில் கூட காலதாமதம் ஆகும். இதனால் இந்த புதிய குற்றச்சாட்டை தனியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
 
மேலும் தனது விசாரணையை முடித்து விட்டதாக சிபிஐ கூறும் வரை யாருக்கும் ஜாமீன் கிடைக்க வழியில்லை. எனவே சிபிஐ தனது விசாரணை முடிந்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தனது தரப்பு வாதத்தை கோர்ட்டில் தெரிவிக்கப் போவதாக ராசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நானும் விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் ஆஜராகப் போகிறேன் என்றார் சுஷில் குமார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger