பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ஊழலுக்கு எதிரான யாத்திரை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார்.
இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூ்டடத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தமும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்த முக்கியமான கூட்டத்தில் அத்வானியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படும் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார். நவராத்திரி விழாவையொட்டி அவர் 9 நாட்களுக்கு விரதம் இருப்பதால் அவர் குஜராத்தை விட்டு வெளியேற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜக வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நவராத்திரி உள்ளிட்டவை தொடர்பாக அவரால் வர முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.
உண்மையில் அத்வானி ரத யாத்திரை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மோடி விரும்பவில்லை என்று கூறப்பபடுகிறது. அத்வானி ரத யாத்திரை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 3 நாள் அதிரடி உண்ணாவிரதத்தை அறிவித்து நாட்டின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார் மோடி என்பது நினைவிருக்கலாம். அத்வானியின் யாத்திரை அறிவிபப்பை மோடியின் உண்ணாவிரதம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இதனால் அத்வானிக்கே கூட அதிருப்திதான் என்று பாஜக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
இந்த உண்ணாவிரத வெற்றியால் கவரப்பட்ட மோடி, குஜராத் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு வருகிறார்.
குஜராத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாள் நவராத்திரி விழாவை அகமதாபாத்தில் 17 நாடுகளின் துணைத் தூதர்கள் முன்னிலையில் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழா, குஜராத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் முக்கிய விழா என்றும் அப்போது அவர் கூறினார். எனவே பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிச்சயம் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?