இன்று நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் வருகையால்,அக்கால வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதையே மறந்து விட்டோம்.அந்த வீடுகளின் கட்டிட அமைப்பில் ஒரு சீர்மை இருக்கும்.அவை வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்தன.
முதலில் படி.படியேறித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.படி என்றால் மற்றொரு பொருள் படிப்பது.ஆக வாசல் படி நமக்கு உணர்த்துவது 'கற்க'.எதைப்படிக்க வேண்டும்? கற்பவை கற்க. பயனுள்ள வற்றைக் கற்க.அவற்றைக் கசடறக்கற்க.
நன்கு படித்ததால் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு வந்தால்,தலை கனத்து விடும்; அகந்தை வந்து விடும்.அது இருக்கக்கூடாது என்பதற்காகவே,பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதை உணர்த்து வதற்காகவே ,வீடு பெரிதாக இருப்பினும்,நிலையை உயரம் குறைவாகவே வைத்தனர். அனைவரும் குனிந்துதான் செல்ல முடியும்.
அடுத்து வருவது நடை என்னும் பகுதி.அதைத்தாண்டியே வீட்டின் முக்கியப் பகுதிக்குப் போக முடியும்.இது எதை உணர்த்துகிறது?படித்த பின் படித்ததைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்—நிற்க அதற்குத் தக.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றில்லாமல்!
பின் வருவது கூடம்.ஹால்.இது எதைக் குறிக்கிறது?கூடுதல் என்றால் சேர்தல்—கூட்டம் கூடுதல் என்று சொல்கிறோம் அல்லவா?கற்றுத்தெளிந்த பின் நல்ல அறிஞர்களின் சேர்க்கை வேண்டும்."சத்சங்கம்" என்று வடமொழியில் குறிக்கப்படுவது இதுவே.
அதன் பின் சமையல் அறை.சமை என்றால் சமைப்பது மட்டுமன்று.முதிர்வடைவதையும் குறிக்கும்-கல்வியால்,கற்றோர் தொடர்பால்,அனுபவத்தால் அடையும் முதிர்வு.
அதோடு தொடர்புடைய மற்றோர் இடம் முற்றம்.அநேகமாகத் திறந்த பகுதியாக இருக்கும். வாழ்க்கையில் எல்லாம் முடிந்து, வாழ்வாங்கு வாழ்ந்தபின் முற்றும் என்று சொல்ல வேண்டியதை உணர்த்துகிறது.
வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அக்கால வீடுகள் எப்படி?
வாழ்க்கை நெறிகளை வட மொழியில் தர்மம்,அர்த்தம்,காமம், மோட்சம் எனப் பகுத்தார்கள்.தமிழில் அதுவே அறம்,பொருள்,இன்பம்,வீடு எனச் சொல்லப் படுகிறது .வீடு பேறு என்பது மோட்சத்தைக் குறிக்கிறது.நாம் வசிக்கும் இடத்தையே மோட்சமாக்குவது நம் கையில்தானே இருக்கிறது?
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?