நடுக்கடலில் 30 படகுகளில் வந்து நாகை மீனவர்களை தாக்கியது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் தான் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பல படகுகளில் வந்த சுமார் 30 பேர் கட்டைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த திசை, தூரம் காட்டும் ஜி.பி.எஸ். கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது இலங்கை மீனவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன. உண்மை அதுவல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஒரு போதும் தமது சகோதர மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை.
அவர்களுடைய ஒரே கோரிக்கை, இழுவைப்படகைக் கொண்டும், தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டும் மன்னார் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என்பதே. இதைத் தவிர இரு நாட்டு மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த தாக்குதல், இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது.
கெய்ட்ஸ் தீவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பது இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என்ற இலங்கை அரசின் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவ, தனது ஆட்களை அனுப்பி தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளார் என்பதே உண்மை.
இலங்கை தமிழர் பிரச்சினைகளில் தமிழக முதல்வர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, தமிழக மீனவர்கள் தான் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றனர். அவர்களை ஜெயலலிதா முதலில் தடுத்து நிறுத்தட்டும் என்று கூறினார்.
அதனை மெய்ப்பிக்கவே இப்படியொரு தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?