மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்? – ஆனந்த விகடன்
மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?
ராஜீவ் கொலை மட்டும் அல்ல… எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!
ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்… என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்? – மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!
இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.
பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? 'குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல' என்றவர், 'உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை' என்றார். காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?
1991 மே 21 – ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய… இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். 'ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்' என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான் ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி… மீறப்படும் முதல் விதியும் இதுதான். செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், 'இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது' என்று சொல்லிவிட்டார்கள்.
"இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை. தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை" என்று நீதிபதிகள் சொன்னார்கள். பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!
பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர். இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் 'வாழும் நீதி தேவதை'யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்…
"இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம். நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!" என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு 'வால்மீகி நடவ டிக்கை' என்றும் பெயரிட்டார்.
"ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?" என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார். மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.
'சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்' என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்? – பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.
1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில், 'என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறி இருந்தார்.
'இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்' என்பதை சோனியா உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களும் அடங்கியிருக்கிறது.
120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் 'கொல்லாமை'பற்றி நிறையவே சொல்கிறது.
வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?
- ஆனந்த விகடன் -
http://sex-story7.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?