ஊழல் இல்லா இந்தியா என்ற 'இந்தியன் தாத்தா' சேனாபதியின் கனவு 15 ஆண்டுகள் கழித்து நனவாகியுள்ளது-இன்னொரு தாத்தா அன்னா ஹஸாரேவின் மூலம்.
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் இந்தியனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் வரும் இந்தியன் தாத்தாவை நினைவுபடுத்துவதாக உள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டம்.
அன்னா ஹஸாரே இந்தியன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார்? இதுதான் இந்தியன் படத்தைப் பார்த்துச் சிலாகித்த, ஏங்கிய பலருக்குள்ளும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கும். காரணம், இந்தியன் படத்தின் இந்தியன் தாத்தா கேரக்டருக்கும், அன்னா ஹஸாரேவுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள்.
கிட்டத்தட்ட இந்தியன் தாத்தா சேனாபதியைப் போலவே அமைந்துள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டமும்.
இந்தியன் படத்தில் ஊழல் இல்லாத இந்தியா அமைய சேனாபதி தனி மனிதராகப் போராடினார். லஞ்சத்திற்கு அடிமையாகி விட்ட தனது மகனைக் கூட கொல்லத் துணிந்தவர் அந்த சேனாபதி என இந்தியன் படத்தின் கதை வரும்.
இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்து நிஜத்தில் ஒரு இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து வந்திருக்கிறார் அன்னா ஹஸாரே. இதை ஷங்கரும், கமலும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த படத்தில் இந்தியன் தாத்தா வந்த பிறகு லஞ்சம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அதிகாரிகள் எல்லாம் உயிருக்கு பயந்து லஞ்சம் வாங்க பயப்படுவது போல காட்சி அமைந்தது.
தற்போது நிஜத்தில் லஞ்சம், ஊழலில் ஊறிப்போயிருந்தவர்களை எல்லாம் நடுநடுங்க வைத்துள்ளார் அன்னா. யாராவது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நான் அன்னா ஆதரவாளர் என்னிடமா லஞ்சம் கேட்கிறாய் என்று மக்கள் தைரியமாகச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.
இதன் மூலம் ஊழலில்லா இந்தியா என்ற கனவு நனவாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியன் கதைக்கும், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் இந்தியன் படத்தின் கதையைப் பார்த்து ஏங்கியவர்களுக்கெல்லாம் இன்று சரியான வடிகாலாக வந்து சேர்ந்துள்ளார் 'தாத்தா' ஹஸாரே.
கமல்ஹாசனும் சரி, இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கரும் சரி, எதிர்காலத்தில் இப்படி ஒரு கேரக்டர் வரும், இந்தியாவை உலுக்கியெடுக்கும் என்று நிச்சயம் கணித்திருக்க மாட்டார்கள். அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். ஆனால் இன்று அன்னா வந்திருப்பதைப் பார்த்து அத்தனை பேர் மனதிலும் இந்தியன் தாத்தாதான் நிழலாடுகிறார்.
உண்மையில், 1960களிலேயே லோக்பால் மசோதா குறித்து பேச்சுக்கள் இருந்தன. இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தியன் தாத்தா கேரக்டரை உருவாக்கினார் ஷங்கர். அந்தக் கேரக்டராக வாழ்ந்ததோடு, அத்தனை பேர் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு நிஜ கேரக்டர் வராதா என்ற ஏக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது கமல்ஹாசனின் நடிப்பு.
இன்று நிஜமான இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து நிற்கிறார் அன்னா ஹஸாரே.
தான் அன்று திரையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இன்று நிஜத்தில் நிகழ்த்தி வரும் அன்னாவைப் பார்த்து கமல்ஹாசன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து ஊழல்வாதிகளும், லஞ்சதாரிகளும் அரண்டு ஓடினர். இன்று அன்னாவைப் பார்த்து லஞ்ச, ஊழல் பேர்வழிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன ஒரு ஒற்றுமை!
1996-ம் ஆண்டு ஷங்கர் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து இப்படி ஒருவர் நிஜத்திலும் வரமாட்டாரா என்று ஏங்கிய மக்களுக்கு, 15 ஆண்டுகள் கழித்து நிஜ இந்தியன் தாத்தாவாக வந்துள்ளார் அன்னா ஹஸாரே என்பது பெரும் ஆச்சரியரகரமான ஒற்றுமைதான்.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?