திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள்.
பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்தன.
பாடல்களின் ஆதிக்கத்திலிருந்த தமிழ் சினிமாவை வசனம் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது. அவ்வப்போது ஊறுகாய் போன்று கவர்ச்சி நடனங்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற தொடங்கின. கவர்ச்சி நடனங்களை ரசிகர்கள் வரவேற்றதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு மவுசு கூடியது. இன்று கவர்ச்சி நடிகையின் இடத்தை கதாநாயகி கனகச்சிதமாக செய்து முடிக்கிறார்.
வெண்ணிற ஆடை, அவள் போன்ற படங்கள் ஏ சான்றிதழுடன் வயதுக்கு வந்தவர்களுக்கு என்ற குறிப்புடன் வெளிவந்தன. இன்று வெளியாகும் அநேக படங்கள் ஏ சான்றிதழ் இல்லாது பாலியல் வக்கிரங்களுடன் வெளியாகின்றன. நகைச்சுவை என்ற போர்வையில் இரட்டை அர்த்தம் கொண்ட பாலியல் வசனங்கள் எதுவித கூச்சமும் இன்றி பேசப்படுகின்றன. அதைக் கைத்தட்டி ரசிப்பவர்களும் உள்ளனர்.
படங்கள் மட்டுமல்ல பாடல்களும் தடம் மாறிப் போயுள்ளன. கீர்த்தனைகள், பக்தி பாடல்கள் மறைந்து பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் பாடல்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட மோசமான பாடல்களை வானொலிகளும், தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டு விளம்பரப்படுத்துகின்றன.
மன்மதலீலையை வென்றவர் உண்டோ என்ற பாடலை அந்த காலத்தில் முணு முணுக்காதவர்கள் யாருமில்லை. அந்தக் கால இளைஞர்களின் தேசிய கீதமாக அப்பாடல் போற்றப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பாடலை கேட்கும் முதியவர்கள் அந்த நாள் ஞாபகத்தில் மூழ்கி வருகிறார்கள்.
வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ, நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே போன்ற பாடல்களில் கொஞ்சம் புகுந்து ஆராய்ந்தால் செக்ஸ் பின்னப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் அந்தப் பாடல்களை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. வாராயென் தோழி வாராயோ என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளை ஆக்கிரமித்துள்ளது.
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே, சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா போன்ற அப்பட்டமான செக்ஸ் பாடல்கள் இன்று எதுவித தடையுமின்றி காற்றிலேயே மிதந்து வருகின்றன. பாலியல் வக்கிரங்கைளத் தூண்டும் காட்சிகளை வெட்டி எரியும் தணிக்கைக்குழு இப்படிப்பட்ட பாடல்களில் கைவைப்பதில்லை.
விஜயலக்க்ஷ்மி, சி.ஐ.டி சகுந்தலா, ஆலம், சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் ஆடுவதற்காகவே ஒப்பந்தங்கள் செய்யப்படுவார்கள். கிளப்டான்ஸ் வில்லனின் பாசரையில் ஒரு கவர்ச்சி நடனம் மட்டும் அந்த காலப் படங்களில் இடம்பெறும். இன்றைய நாயகிகள் பாடங்களில் போட்டிப் போட்டு கவர்ச்சியை காட்டுகிறார்கள். அதேவேளை பொது வைபவங்களிலும் கவர்ச்சி உடையில் தோன்றி பரபரப்பூட்டுகிறார்கள். முன்னால் முதல்வர் கருணாநிதி கலந்துக் கொண்ட வைபவத்தில் கலந்துகொண்ட கதாநாயகி கவர்ச்சி உடையில் வலம் வந்தால் பெரிய சர்ச்சை எழுந்தது.
தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் சிந்து பைரவி சிறந்த கதை, நல்ல நடிப்பு, மனதில் நிறைந்த பாடல்கள் முணு முணுக்க வைக்கும் இசை, தேசிய விருது என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட படம். பாலசந்தர், ஜேசுதாஸ், இளையராஜா, வைரமுத்து, சித்ரா, சிவகுமார், சிஹாசினி, சுலக்ஷனா இவர்களில் யார் சிறந்தவர் என்ற பட்டிமன்றம் வைத்தால் முடிவு சொல்வது மிக கடினம். பிரபல இசை மேதை ஜே.கே.பி யின் பாலியல் பலவீனம் என்ற ஒரு வரிக்கதையை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிபெற்ற சங்கராபரணத்தின் நிலையும் இதுதான்.
கலை, கலாசாரம் என்ற வரம்பை உடைத்து வெளிவந்த ஒரு சில தமிழ்ப்படங்களைப் பற்றிய தகவல்களை மித்திரன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கம்.
மித்திரன் 28/08/11
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?