தமிழ் புத்தாண்டு, மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாறியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், "தை' முதல் நாளை, தமிழ் புத்தாண்டு என மாற்றி கொண்டு வரப்பட்ட சட்டம், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, சட்டத்தின் மூலம், புத்தாண்டில் மாற்றம் கொண்டு வந்ததில், எந்த சட்ட விரோதமும் இல்லை என, ஏற்கனவே ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து, 2008ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு, அப்போது ஒரு நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூரிலுள்ள சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில், சித்திரைத் திருநாளில், அதாவது ஏப்., 13 அன்று சிறப்பு வழிபாடு நடத்த, தமிழ்நாடு முருக பக்த பேரவை சார்பில் கோரப்பட்டது. இதற்கு, கோவில் நிர்வாக அதிகாரி மறுத்து விட்டார். சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுத்ததால், அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு முருக பக்த பேரவை சார்பில், வழக்கு தொடரப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில், சிறப்பு வழிபாடு நடத்த அனுமதி மறுத்தது, அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும், சித்திரை முதல் நாளில், சிறப்பு வழிபாடு நடத்துவது, இந்து சமய நடைமுறை என்றும், மனுவில் முகாந்திரங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கை, நீதிபதி சந்துரு விசாரித்தார். ஒரு ஆண்டில் எந்த நாளிலும் பூஜைகள் நடத்த, முருக பக்த பேரவைக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதி, ஆனால் இந்தப் பிரச்னைக்கு, சமய சாயம் கொண்டு வர முயற்சிப்பது, துரதிர்ஷ்டவசமானது என, சுட்டிக் காட்டினார்.
மேலும், தமிழ் காலண்டரில் உள்ள குறைபாடுகளையும், தனது உத்தரவில் நீதிபதி சந்துரு சுட்டிக் காட்டியுள்ளார். அவரது உத்தரவில், "தமிழ் காலண்டரில் உள்ள, 60 ஆண்டுகளின் பெயர்களில் சமஸ்கிருத பெயர்கள் காணப்படுகிறது. இது எப்படி வந்தது என்பதை, இதுவரை அறிஞர்கள் யாரும் விளக்கவில்லை. இதுகுறித்த வாதம் முடிவில்லாமல் செல்கிறது.
சலிவாகனா, ஹிஜிரி, கிறிஸ்தவ, சகா என, வெவ்வேறு காலமுறைகளை தமிழ்நாடு பின்பற்றியுள்ளது. எனவே, காலண்டரை மாற்றுவது என்பது அரசைப் பொறுத்தவரை புதிதல்ல. அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு, சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும் வரை, மத அடிப்படையில் அதை கேள்வி எழுப்ப முயற்சிப்பதை ஏற்க முடியாது' என கூறியுள்ளார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும் போது, தமிழ் காலண்டரை பின்பற்றலாம் என்றும், சட்டத்தின் மூலம் தமிழ் புத்தாண்டில் மாற்றம் கொண்டு வந்ததில், எந்த சட்டவிரோதமும், அரசியலமைப்புக்கு எதிரானதும் இல்லை என்றும் நீதிபதி சந்துரு தனது உத்தரவில் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், அரசுக்கும் ஒரு பரிந்துரையை நீதிபதி அளித்துள்ளார். தமிழ் காலண்டரிலுள்ள, 60 ஆண்டுகள் குறித்த, சமஸ்கிருத பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றுவதற்கு, பரிந்துரைகளை செய்ய நிபுணர் குழுவை, அரசு நியமிக்கலாம் எனவும் உத்தரவில் கூறியுள்ளார். தற்போது, தமிழ் புத்தாண்டு, சித்திரை என தமிழக அரசு மாற்றியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமானது, நடைமுறைக்கு மாறாக உள்ளது என, தொல்பொருள் அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும், பொது மக்களும் கூறுவதால், இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டத்தை கொண்டு வந்த அரசுக்கு, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. ஐகோர்ட் பரிந்துரைப்படி, தமிழ் காலண்டரில் உள்ள சமஸ்கிருத பெயர்களை, தமிழ் மொழியில் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்குமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?