Sunday, 28 August 2011

என்னது, ஜெயிச்சு���்டோமா?



விக்கிரமன் இயக்கிய படங்களைப் பார்த்திருக்கிறோம். படம் முழுக்க கதாநாயகனுக்கு இடைவிடாமல் தொல்லையளிக்கிற வில்லன் இறுதிக்காட்சியில் மனம்திருந்திவிடுவார். பிறகு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் பின்னணி இசை "லா..லாலா..லாலாலா" என்று கோரஸில் ஒலிப்பதோடு 'வணக்கம்' போடுவார்கள். அப்படியொரு விக்கிரமன் படம் நேற்று ராம்லீலா மைதானத்தில் தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது. ஆனால், 'வணக்கம்' போடுவதற்கு பதிலாக 'இடைவேளை' கார்டு போட்டிருக்கிறார்கள் என்பதால் இன்னும் நிறைய கோரஸ் கேட்கவேண்டியிருக்கிறது. ஆகவே, கையில் பாப்கார்னை வைத்துக்கொண்டு 'வெற்றி வெற்றி' என்று குதிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-)

நான் எனது முந்தைய இடுகையில் எழுதியிருந்தது போல, பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து, அண்ணா வலியுறுத்திய மூன்று அம்சங்களை லோக்பால் சட்டத்தில் (ஜன் லோக்பால் அல்ல) அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு அவையின் உணர்வை (Sense of the House), வாக்களிப்பின்றி "தீர்மானமாக" ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைத்தான் "வெற்றி!வெற்றி!!" என்று அண்ணாவின் கோஷ்டியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (பாவம், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கையில், இருக்கிற பட்டாசுகளை நமுத்துப்போகவா விட முடியும்?)

அந்த மூன்று அம்சங்களில் சுலபமாய் எந்த சிக்கலுமின்றி அமலுக்குக் கொண்டுவரத்தக்கது, Citizen's Charter என்று கருதுகிறேன். ஒரு அரசு அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட அலுவலை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்யாவிட்டால், அதற்கான தண்டனை என்ன என்று அறிவிப்புப்பலகையாக வைப்பது. இதை ஏற்கனவே மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உ.பி. போன்ற மாநிலங்களில் சட்டங்களாகவே நிறைவேற்றி அமல்படுத்தியிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். ஆகவே, அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆட்சேபிக்காதவரையில், இதை மத்திய அரசு சுலபமாக வரையறுத்து சட்டமாக்கி விடலாம். இதை மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிதாகக் கருதி, நிலுவையில் வைத்திருக்கிறது என்பது புரியவில்லை.

லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டுவருகிற இரண்டாவது அம்சத்திலும் கூட, நடைமுறைச் சிக்கல்கள் தவிர பெரிய பிரச்சினை இருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு மனதுவைத்தால், இதற்கு உடனடித்தீர்வு காணலாம். இதுவும் ஒரு பிரச்சினை இல்லை.

நடைமுறைப்படுத்துவதில் மிகவும் கடினமானது என்றால், அது ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாவை அமைப்பதுதான். அதிகம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு சமீபகால நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும்.

  1. சென்ற வாரம்வரைக்கும் ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. திடீரென்று அண்ணாவுக்கும், ஜன் லோக்பாலுக்கும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அதே பா.ஜ.க, மத்திய அரசு குஜராத்தில் லோக் ஆயுக்தாவைத் 'திணித்திருப்பதாக' ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள்.
  2. உ.பி முதலமைச்சர் மாயாவதி ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்ப்பதோடு, "முடிந்தால் அண்ணா ஹஜாரே தேர்தலில் நின்று ஜெயித்து ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரலாமே?" என்று நையாண்டி செய்திருக்கிறார்.

ஆக, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி அரசியல் காரணங்களால் இந்த லோக்-ஆயுக்தாவை இந்தியா முழுக்கவும் நிறுவுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். மீறி, மத்திய அரசு குஜராத்தைப் போல பிற மாநிலங்களில் திணித்து, அது நீதிமன்றத்துக்குப் போனால், தீர்ப்பு வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இது தவிர, லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தினாலேயே ஊழல் ஒழிந்துவிடும் என்பது நகைப்புக்குரியது என்பதை அண்ணாவின் மாநிலமான மகாராஷ்டிரத்தையே உதாரணமாகக் காட்டி எனது "வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்" இடுகையில் விளக்கியிருக்கிறேன்.

மேலும் பாராளுமன்றத்தில் மேற்கூறிய மூன்று அம்சங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிற விதம் அண்ணாவின் குழுவில் பலருக்கே முழுத்திருப்தியளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். "இது பாதி துரோகம்(part betrayal)" என்று மேதா பாட்கர் தெரிவித்திருக்கிறார். அண்ணா ஹஜாரேயை விடவும் மேதாத்தாய் பல போராட்டங்களையும், ஏன், அடக்குமுறைகளையுமே சந்தித்தவர் என்பதால் அவரது கணிப்பில் தொனிக்கிற அச்சத்தை அலட்சியப்படுத்துவதற்கில்லை.

உலகத்தையே இந்தியாவின் பக்கம் அண்ணாவின் உண்ணாவிரதம் ஈர்த்திருக்கிறது என்பதை அவரது மோசமான விமர்சகனும் ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

அதற்குக் காரணம் - ஒரு 74 வயது முதியவர் "சாகும்வரை உண்ணாவிரதம்," என்று ஆரம்பித்து, அதற்குப் பின்புலத்தில் ஊடகங்களும், Facebook, Twitter போன்ற சமூகத்தளங்களில் நடந்த பிரச்சாரமும், சில பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியும், எதிர்க்கட்சிகளின் தொண்டர்படையும்தான்.

இவர் சாகும்வரை உண்ணாவிரதம் அல்ல; காலவரையற்ற உண்ணாவிரதம் என்றெல்லாம் சொதப்ப ஆரம்பித்தபோது உலக ஊடகங்களும் விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டன. இவ்வளவு ஏன், பாராளுமன்றத்தில் பிரதமர் கோரிக்கை விடுத்தபிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தபோது, உள்ளூர் ஊடகங்களுமே கேள்விகேட்கத் தொடங்கிவிட்டன. அண்ணாவின் பஜனைகோஷ்டியில் ஏற்பட்ட பிளவுகள் இப்போது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

ஆக, "ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்," என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் "கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்," என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் "ஓட்டெடுப்பு வேண்டும்," என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை! கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிற மூன்று விஷயங்களுமே கூட, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நிலைக்குழுவிற்குப் பரிந்துரைத்தவைதான்.

சுருக்கமாகச் சொன்னால், சமச்சீர் கல்வி தீர்ப்பு குறித்து தி.மு.க வெற்றிவிழா நடத்துவதற்கும், "TOTAL VICTORY FOR ANNA" என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா கொண்டாடுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: The proof of the pudding is in the eating!

பாராளுமன்ற நிலைக்குழு(Standing Committee) வுக்கு லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற 60+30+30 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இறுதிவடிவம் பெற்ற லோக்பால் சட்டம், அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, சட்டமாக இயற்றப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலும் இது யாருக்கும் வெற்றி என்று கூத்தாடுவது - சுத்த சின்னப்பிள்ளைத்தனம்!

கிரிக்கெட்டில் இந்தியா 'டாஸ்' வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்! :-)

மக்களுக்கு ஊழல் குறித்த கோபம் வந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் மூன்று மிகப்பெரிய ஊழல்கள். 2G, காமன்வெல்த் ஊழல் மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல். அந்த ஆதர்ஷ் ஊழலில் தொடர்புபடுத்தப்பட்டு, பதவியிழந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமிருந்து பிரதமரின் கடிதத்தைப் பெற்று, 'போராட்டம் முடிந்தது,' என்று அண்ணா ஹஜாரே அறிவித்தது தான் உச்சகட்ட நகைச்சுவை! இதுக்குப் பேருதான் கொள்கைப்பிடிப்பு போலிருக்குது!

என்னைப் பொறுத்தவரையில், லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்க முடியாது என்று நம்புகிற அளவுக்கு - இது அண்ணா ஹஜாரேயின் வெற்றியில்லை என்பதையும் உறுதியாக நம்புகிறேன். காரணம், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger