மேலப்பாளையத்தில் ஜெனரேட்டர் புகையில் சிக்கி உயிரிழந்த புதுமண தம்பதி smoke generator trapped couple dead in melapalayam
நெல்லை பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது28). சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மேலப்பாளையம் பங்களாப்பா நகரை சேர்ந்த கதீபா குல்னாஸ் (19) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
பக்ரீத் கொண்டாடுவதற்காக முகமது சுலைமான் மனைவியுடன் நேற்று மேலப்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். ஆடு வெட்டி விருந்து சாப்பிட்டு விட்டு நேற்று இரவு 11 மணி அளவில் மாடி அறையில் படுக்க சென்றனர். அப்போது மின்சாரம் தடைபட்டதால், மண்எண்ணை ஜெனரேட்டரை இயக்கி படுத்து தூங்கினர்.
மின்சாரம் வந்த பின்னர் கதீபாவின் தந்தை இன்று அதிகாலை 3 மணி வரை ஜெனரேட்டர் ஓடியதால் ஆதம்பாலா மாடிக்கு சென்று ஜெனரேட்டரை 'ஆப்' செய்ய கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவை தட்டியும் புதுமண தம்பதிகள் கதவை திறக்கவில்லை.
இதனால் உறவினர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு படுக்கையில் கணவன் –மனைவி இருவரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையின் ஜன்னல் கதவுகள் அனைத்தையும் அடைத்து விட்டு அவர்கள் படுத்ததால், ஜெனரேட்டர் புகையில் சிக்கி மயக்கம் அடைந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருமணமான 37 நாட்களிலேயே கணவன்–மனைவி இருவரும் இறந்ததால் உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் ராஜமன்னர், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?