Wednesday 10 July 2013

இளவரசனுடன் கடைசியாக போனில் பேசிய ஆந்திர வாலிபர்

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4-ந் தேதி ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றனர். ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொலை செய்ததாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறும் போது, இளவரசன் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்வதாக கூறித்தான் காலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 9 ஆயிரம் பணம் எடுத்தார். அதில் ரூ. 7 ஆயிரத்தை தனது தாயிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை ஊருக்கு செல்ல வைத்துக் கொண்டார்.

அதோடு இல்லாமல் தன்னுடன் சித்தூர் வரை வரும்படி இளவரசன் தனது உறவினர் ஒருவரை அழைத்ததாகவும் அவர் வரமறுத்த நிலையில் இறந்து விட்டதும் தெரியவந்தது. எனவே தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருந்தால் அவர் உறவினரை தன்னுடன் எப்படி அழைத்து இருப்பார்?  எனவே இளவரசன் கொலை தான் செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டினர்.


பெருத்த சர்ச்சையை கிளப்பிய இளவரசன் மரணம் குறித்து விசாரித்து வந்த நிலையில் திடீரென தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் இளவரசன் எழுதியதாக 4 பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த கடிதத்தை ஒருவர் எடுத்து மறைத்து கொண்டதாகவும் அவரிடம்  நடத்திய விசாரணைக்கு பின்பு கடிதம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை இளவரசனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவரது தந்தை இளங்கோ கடிதத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். ஆனாலும் போலீசார் கடிதத்தை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த சோதனையில் இளவரசன் எழுதிய பழைய கையெழுத்து வைத்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் அந்த எழுத்து எழுதப்பட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்றும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் இளவரசனின் உறவினர்கள் கொலை என்றும், மறுபுறம் போலீசார் தற்கொலை என்றும் கூறிவருகிறார்கள். ஆனாலும் போலீசார் இளவரசனின் பெற்றோர் சொல்லும் குற்றச்சாட்டு குறித்தும் ஒரு புறம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இளவரசன் கடந்த 4-ந் தேதி 12.30 மணியளவில் இறந்ததாக கூறப்படுகிறது. எனவே அன்றைய தினம் அவருடன் யாரெல்லாம் எவ்வளவு நேரம் செல்போனில் பேசினார்கள் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி (30) என்பவர்  பலமுறை இளவரசனிடம் போனில் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் டிரைவராக வேலைப்பார்த்து வருவது தெரியவந்தது. போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஆந்திராவில் இருந்து தனிப்படை போலீசார் கார்த்தியை இன்று தர்மபுரிக்கு கொண்டு வருகின்றனர். இளவரசன் மரணத்தில் பல சர்ச்சைகள், சந்தேகங்கள் இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஆந்திர வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger