அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து தொடர்ச்சியாக இப்பத்தியில் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வே முக்கியமானதாக கருதுகின்றனர்.
தமிழ் மக்களின் இந்த உள்ளக்கிடக்கை மீண்டும் ஒருமுறை தகர்ந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலேயே தொடர்ச்சியாக இப்பத்தியில் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுகின்றது.
அதேவேளையில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டிலிருந்து இம்மியளவும் விலகியதாகவோ அல்லது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனோ இருக்கவில்லை.
போருக்குள் சிக்கி சின்னா பின்னமாகி உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அநாதையாக நின்ற பொழுதும் கூட தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்துள்ளனர்.
தமிழ் மக்களின் இந்த உள்ளக் கிடக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்தியில் பதிவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.
இதற்குமப்பால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் நிறையவே பேச வேண்டியுள்ளது.
அரசியல் தீர்வுக்கப்பால் வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்தி பற்றி பேசுபவர்கள் கூட பேச்சுக்களாலேயே வசந்தத்தை தூவி விட்டுச் செல்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஒருமுறை பேசும்பொழுது, "அகப்பை அவன் கையில்'' என்று குறிப்பிட்டார்.
அதாவது அகப்பை எமது கைக்கு வந்தாலே எமக்குத் தேவையானதை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக அவ்வேளையில் ஒலித்தது
இன்றும் அக்கூற்று யதார்த்தமாகவே உள்ளது என்பது இன்றைய சம்பவங்களும் சாட்சியாக எம்முன் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும்பொழுது தீர்வுப் பொதியுடன் செல்ல வேண்டும். தீர்வுப் பொதியினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அது உரிய முறையில் சம்பந்தப்பட்டவர்களால் செவி சாய்க்கப்படாததன் விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதியில் பூஜ்யமாக முடிவடைந்துள்ளன.
கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அவர்கள், "ஒரு வருடமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு குறித்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த ஒரு நிலை உருவாகும் என்பது ஏற்கனவே இப் பத்தியில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
கூட்டமைப்பு பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் அரசாங்கத் தரப்பின் நிலைப்பாட்டை எப்பொழுதோ தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.
அது மாத்திரமல்ல, கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தூதுக் குழு சாமான்யமானதல்ல என்பது குறித்தும் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
ஒரு வருட பேச்சுவார்த்தையின்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என அரசாங்கத் தரப்பு கூறியதுடன், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் பங்குபற்றுவதன் மூலமே இன விவகாரத்துக்கான தீர்வைக் காண முடியும் என அறிவித்துவிட்டது.
இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அவர்களின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அத்துடன் 13 பிளஸ்ஸை ஜனாதிபதி தருவதாக உடன்பட்டிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக மிக இலாவகமாக காய்களை நகர்த்தி நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும்'' காட்டும் இலங்கையின் இராஜதந்திரம் மிக வெற்றிகரமாக இன்னொருமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் கூட்டமைப்பை ஒரு பொறிக்குள்ளும் சிக்க வைத்துள்ளது.
கூட்டமைப்பைப் பொறுத்து ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைக்கு சென்றதாக கூறுகின்றது.
ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டின்படி பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நிறைவேற்றப்படும என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியுட னேயே பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகவும், ஆனால் கடந்த ஒருவருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடோ அல்லது தீர்வோ காணப்படாத நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு போவதில் அர்த்தமில்லை என்றும் தற்பொழுது கூட்டமைப்பு வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே இப்பத்தியில் கூட்டமைப்பு "பேச்சுவார்த்தைப் பொறிக்குள்'' சிக்கக்கூடாதென்று எழுதியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
உண்மையில் கூட்டமைப்பை அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைத்துவிட்டது என்பதையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய இந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அரசாங்க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வல்லமையையோ அல்லது நிபுணத்துவத்தையோ தமிழர் தரப்பு பெற்றிருக்கவில்லை என்பதையும் தமிழர் தரப்பு உணர்ந்தாக வேண்டும்.
கடந்த ஒரு வருடகால பேச்சுவார்த்தையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட தமிழர் தரப்பால் காப்பாற்றிக் கொள்ள முடியாது போய்விட்டது.
ஜனாதிபதி கூறுகின்ற 13 ஆம் 13 பிளஸும் என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரமற்ற திருத்தத்துடனான 13 பிளஸ்ஸாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
அரச தரப்பின் அந்த திருத்தத்துடனான தீர்வாகவே நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குரியதாகும். வட்டுக்கோட்டை பிரகடனத்தில் இருந்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு சென்றதை விட மோசமான நிலைக்கு தமிழினம் இன்று தள்ளப்பட்டு விட்டது.
அரசாங்கத்தைப் பொறுத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர்கள் முடிவடையும்வரை தீர்வு குறித்த நகர்வை இழுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய நிலையில் பேச்சுவார்த்தையை குழப்பியதாகவோ அல்லது முறித்துக் கொண்டதாகவோ யார் யார் மீது பழிபோடுவது அல்லது பொறுப்பு சுமத்துவது என்பதில் தான் அரசாங்கத் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பனிப்போராக இருக்கின்றது.
கூட்டமைப்பு தன் மீது அந்தப் பழி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது.
அரசாங்கம் இதை விட மேலான கவனத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
http://tamil-cininews.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?