முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அக்கிரமங்களைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் தமிழகம் முழுக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி ஒருநாள் முழுக்க அனைத்து திரைப்பட காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஏராளமான திரையரங்க உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில், "முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் வருகிற 15-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது.
அன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும். மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். உண்ணாவிரதத்துக்கான இடம் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக நடிகர் சங்கம் அல்லது 'பிலிம்சேம்பர்' வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்போம்.
தியேட்டர் அதிபர்களுடன், தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.
காட்சிகள் ரத்து
அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,450 தியேட்டர்கள் உள்ளன. அத்தனை தியேட்டர்களிலும் 15-ந் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்," என்றார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர் உடனிருந்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?