சகோதரியும், தோழியுமான ஆமீனா'வும் மற்றும் நண்பர்கள், தோழிகளின் எல்லாரின் அழைப்பை ஏற்று குழந்தைகள் பற்றி என் சொந்த அனுபவங்களை சொல்லியுள்ளேன்.
எனக்கு பொதுவாவே குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசில் இருந்தே, எங்க வீட்டில் முதல் குழந்தை என் மூத்த அண்ணன் மகன் ஜோஸ்வா, நான் மும்பையில் இருந்து லீவுக்கு போகும் போதெல்லாம் அவனையும் சைக்கிளில் வைத்துதான் ஊர் சுற்றுவேன் நண்பர்களுடன், அவன் கேட்பதெல்லாம் பட்டாம்பூச்சியும், பொன்வண்டும், மீன்களும்தான்...
அவைகளை அவனுக்கு பிடித்து கொடுப்பதில் நான் படும் அவஸ்தையை கண்டு எங்க அண்ணி சிரித்து, கிண்டல் பண்ணி மகிழுவார்கள். நான் பிடித்து கொடுத்ததும் அவன் அடையும் சந்தோசம் இருக்கே, அடடா நானும் குழந்தை ஆகிவிடுவேன் அவனோடு.....நான் அப்போது கள்ளத்தனமா சிகரெட் பிடிப்பதை செய்கை மூலம் வீட்டில் போட்டு குடுத்ததும் அவன்தான்....
அடுத்து பிறந்தது என் அக்காள் மகள் மெர்ஸி, இவள் ஊரில் பிறந்து மும்பை கொண்டு வரும்போது, மும்பை தாதர் ரயில்வே ஸ்டேசனில் அக்காள் குடும்பத்தை வரவேற்க போயிருந்த போது, யாரும் வா என்று கைகாட்டினால் போகவே மாட்டாளாம், நான் கை நீட்டியதும் அவள் கைநீட்டி என்னை தூக்க சொன்னாள், அக்காளுக்கும் அத்தானுக்கும் ஆச்சர்யம்....!!!
என் மகள் ஜோஸ்லி ஸ்வீட்டி சுருக்கமாக ஜாய், அக்காள் மகன் மெல்க்கு....
மும்பையில் எனக்கு வேலை முடிந்ததும், அவளை தூக்கி வரச்செய்து ஆவலுடன் நானும் குழந்தையாக விளையாடுவேன் அவளோடு, அடுத்து என் மகன் பிறந்தான், இன்னொரு கசின் அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள் எல்லாம் பிறந்து வாய் பேசும் தருணம், விதி என்னை வெளிநாட்டுக்கு துரத்தியது....
அக்காள், அண்ணன் பிள்ளைகள் மும்பை வாட்டர் கார்டன் முன்பு பந்து விளையாடுகிறார்கள்...
லீவில் ஊர்வரும்போது, என் அக்காள்கள் பிள்ளைகள் மூன்று பேரையும், அந்தந்த நேரத்துக்கு ஸ்கூல் விடுவதும், அழைத்து வருவதும் நான்தான், அக்காக்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்...
பைக் பின்னாடி, முன்னாடின்னு இவர்களை வைத்து கொண்டு போகும் போது, என்னை அணைத்து பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்லும்...
அதுவுமல்லாமல், ஸ்கூல் முடியும் போது, என்னை நோக்கி ஓடி வரும் அழகு இருக்கே தேவதைகள் எல்லாம் அதற்கு முன்பு ஜுஜிபி, அதுவும் அல்லாமல், என்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...
எல்லாருமே என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் [[இப்போதும்]] மனோ மாமா, மனோ சித்தப்பா, வீட்டில் எல்லாருக்கும் இளையவன் என்பதாலா அல்லது பாசத்தாலா என்று இதுவரை தெரியாது, பெரியவர்களும் பிள்ளைகளை அதட்டியும் பிரயோஜனம் இல்லை, அவர்கள் பெயர் சொல்லித்தான் உறவை சொல்லுவார்கள், நல்லகாலம் என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி..எங்கள் குடும்பத்தில் வேறு யாரையும் இவர்கள் பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்று சொல்லி, குடும்பத்தார் ஆச்சர்யமாக மகிழ்வதை பார்த்துருக்கேன்...
ஸ்கூல் லீவு நாட்களில் என்னோடுதான் இருப்பார்கள், பூங்கா. மும்பை ஏர்போர்ட்'ன்னு பைக்ல அள்ளிப்போட்டு கொண்டு போவேன், அவர்கள் ஆசையெல்லாம், பானி பூரி சாப்பிடுவது, இலந்தை பழம், வெட்டி உப்பு போட்டு வைத்திருக்கும் மாங்காய், கடலை, குச்சி மிட்டாய் இப்பிடி போகும் லிஸ்ட்....
மும்பை, தானா சூரஜ் வாட்டர் கார்டன்..
அவர்களோடு நானும் திங்கவேண்டும் என்று வாயில் ஊட்டி விடும் தருணம் கவிதையோ கவிதை, அந்த ருசி ஜென்மத்தில் கிடைக்காது...!!! அவர்களுக்குள் நடக்கும் செல்லசண்டைகளை நாட்டாமை செய்யும்போது, நானும் குழந்தையாகி விடுவேன்...
நான் மறுபடியும் வெளிநாட்டுக்கு திரும்பும்போது, ஏர்போர்டில் இவர்கள் முகம் வாடி இருப்பதை பார்க்கும் போது, வாழ்க்கையை நினைத்து மனதுக்குள் ரத்தகண்ணீர் வடிப்பேன், எங்க அக்காமாரும் ஒரே புலம்பலா புலம்புவாங்க, மூணுமாசம் எங்களுக்கு ரெஸ்ட் கிடச்சுது நீ போனப்புறம் இனி நாங்கதான் ஸ்கூலுக்கு அலையனும்னு, போற வாரப்போல்லாம், மனோ மாமா அதை வாங்கி தந்தாங்க இதை வாங்கி தந்தாங்க நீங்களும் வாங்கி தாங்கன்னு கடுப்பெத்துவாங்களே என்று புலம்புவார்கள் சந்தோசமாக....
அடுத்து எனக்கு மகள் பிறந்தாள் கிறிஸ்மஸ் தினத்தில், குடும்பமே மகிழ்ச்சி கொண்டது இவள் கிறிஸ்மஸ் அன்று பிறந்ததால் [[ஹி ஹி எனக்கு ரெட்டை செலவு வச்சிட்டாள் என் செல்லம்]]
ஊர்ந்து நடக்கும்போது, பேசத்தெரியாததால் என்னை ஆத்தா ஆத்தா என்று கூப்பிடுவாள், ஒருநாள் பகலில் தூங்கி கொண்டிருக்கும் போது ஆத்தா ஆத்தா என்று அழைத்தவாறே ஊர்ந்து வரவும், பயபுள்ள நம்ம கூட படுத்துறங்க பாசமா வாராளேன்னு தூக்கி பெட்டுல வச்சி தூங்கசொன்னா, அவள் பெட்டுக்கு மேலாக இருக்கும் செல்பில் உள்ள விளையாட்டு சாமான்களை எடுத்து வச்சி விளையாடிட்டு இருக்கிறாள், அதுதான் குழந்தை உலகம்...!!!
[[நானும் குழந்தைதான் ஹி ஹி, மதுரை தமிழன் என்னை பால்காரன் மனோ'ன்னு கலாயிச்சி கிராப்பிக்ஸ் பண்ணி அனுப்பிய மெயில் போட்டோ....]]
இப்போ பிள்ளைகள் வளர்ந்து விட்டாலும், தூர இடங்களுக்கு இடம் மாறிவிட்டாலும், நான் ஊர் போனால் ஓடி வந்து வளைந்து கொள்வார்கள், இந்த முறை ஊர் போனபோது, அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, கார் பிடித்து, மும்பை, தானா'வில் உள்ளா சூரஜ் வாட்டர் கார்டன் அழைத்து சென்றேன்...
ஆஹா நானும் குழந்தையாக அவர்களோடு தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தேன், அங்கே மியூசிக் போட்டு செயற்கை மழை பொழிய செய்கிறார்கள், அங்கே போயி நானும் அவர்களோடு குழந்தையாக நடனம் ஆட, என் மனைவி ரசிச்சுட்டு இருந்தாங்க...!!!
[[நானும் குழந்தையாக அவர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது எங்க பெரிய அண்ணி எடுத்த போட்டோ...]]
வெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை இருக்கே வேதனை, சரி இந்த வருஷம் ஊரில் செட்டில் ஆகிறலாம், அதோ அந்த வருஷம் செட்டில் ஆகிரலாம்னு, நினைக்கும் நேரம், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்பத்தின் தேவைகளின் அத்தியாவசியங்களும், பணத்தின் செலவுகளும், நம் கணக்கை மீறி தாண்டுவதால், என்னைபோன்றவர்கள் இங்கே தவித்து கொண்டு இருக்கிறோம்....!!!
ஒ தொடர்பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா....? நான் போன் பேசும் போதெல்லாம் தன் மகனுடன் விளையாடி கொண்டே, இருக்கும் குழந்தை விக்கியை அழைக்கிறேன்...
சிபி'யை அழைக்கிறேன் [[வருவானா...?]]
வேடந்தாங்கலும் குழந்தையோடு இருப்பதால், கருனை'யும் அழைக்கிறேன்......!!!
http://galattasms.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?