Wednesday, 23 November 2011

வளர்ப்பு மகன் திருமண செலவு ரூ.6 கோடி நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை

 
 
 
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆஜரானார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவு ரூ.6 கோடி பற்றி அவரிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. 'நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை' என்று அவர் பதில் அளித்தார். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு 6 ஆண்டுகளாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. முக்கிய கட்டமாக குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313ன் கீழ் கேள்வி பதில் விசாரணை இப்போது நடக்கிறது.
 
மொத்தமுள்ள 252 சாட்சிகளின் அடிப்படையில் 1384 கேள்விகள் தயார் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா 1339 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கடந்த மாதம் 20, 21 தேதிகளில் அவரிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டது. மீதமுள்ள கேள்விகள் நவம்பர் 8ம் தேதி கேட்கப்படும் என நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹகார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். இளவரசி ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. மாலை 5.20 மணிவரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். ஜெயலலிதாவின் வங்கி கணக்குகள், பங்கு பரிவர்த்தனை, சுதாகரன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து நீதிபதி கேட்டார்.
 
அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதிலளித்தார். மொத்த கேள்வி களும் முடியாததால் விசாரணை புதன்கிழமையும் தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 192 கேள்விகளுக்கு ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவு பேரில் 3ம் நாளாக ஜெயலலிதா இன்று ஆஜரானார். காலை 11 மணி தொடங்கி மாலை 5.20 மணிவரை நீதிபதி கேள்விகளை கேட்டார். இன்று 580 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை அவரிடம் 1147 கேள் விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் 192 கேள்விகள் பாக்கி உள்ளது. நாளை அந்த கேள்விகளும் கேட்கப்படும்.
 
இன்று அவர் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6 கோடி செலவு செய்தது தொடர்பான கேள்விக்கு, 'நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. முழு செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டனர்' என்று பதிலளித்தார். மேலும், வங்கி கணக்கு, தொழிற்சாலைகளில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு 'நான் எதிலும் முதலீடு செய்யவில்லை. என் மீது பற்று கொண்டவர்கள் என் பெயரை சேர்த்திருக்கலாம். எனக்கு தெரியாது' என்று பதிலளித்தார்.
 
தொண்ணூறு சதவீத கேள்விகளுக்கு 'எனக்கு தெரியாது' அல்லது 'நினைவில்லை' என்று பதிலளித்தார். இவ்வாறு ஆச்சார்யா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கூறும்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் தெளிவாகவும் நிதானமாகவும் பதிலளித்தார். நாளை மீதியுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றார்.
 
பரப்பன அஹ்ரகார சிறைச்சாலை வளாகம் மற்றும் வளாகத்துக்குள் செல்லும் நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த முறை ஜெயலலிதா வந்தபோது அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டதால் இந்த முறை குடியிருப்புவாசிகளுக்கு அடையாள பாஸ் வழங்கப்பட்டது.
 
நீதிமன்றத்துக்குள் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்று பல வக்கீல்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பி.குமார், ராஜன், கந்தசாமி, சரவணகுமார், பால்கனகராஜ், விவேகவாணன், விஜயராஜ் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மேயர் சைதை துரைசாமி மதியம் 1 மணிக்கு வந்தார். அவர் யார் என்று போலீசாருக்கு தெரியாததால் முதலில் அனுமதிக்கவில்லை. மேயர் என்று தெரிந்தபின் உள்ளே நடந்து செல்ல அனுமதித்தனர். சாலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மேயர் நடந்து சென்றார்.
 
25 கார்கள் புடைசூழ
 
நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜெயலலிதா நேற்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் சசிகலா மட்டும் வந்தார். விமான நிலையத்திலிருந்து 25 கார்கள் புடைசூழ ஜெயலலிதா கார் சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தது. 10.35 மணிக்கு அவர் சிறப்பு நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தார்.
 
சென்னை சாப்பாடு
 
மதியம் 1.45 மணியளவில் நீதிமன்றம் மதிய இடைவேளை அறிவித்தது. உணவு கொண்டு வரப்பட்டது. அதை இருவரும் கேரவனில் இருந்தவாறு சாப்பிட்டனர். அந்த சாப்பாடு சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டது என கட்சிக்காரர்கள் கூறினர்.
 
15 நிமிடம் காத்திருந்தார்
 
சிறப்பு நீதிமன்றத்துக்கு 10.40 மணிக்கு வந்த ஜெயலலிதா உடனடியாக நீதிமன்றத்துக்குள் செல்லவில்லை. விசாரணை 11 மணிக்கு என்பதால் நீதிமன்றத்துக்கு நீதிபதி வரும்வரை காரில் அமர்ந்திருந்தார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger