Sunday, 27 November 2011

இன்று தமிழீழ தேச���ய மாவீரர் நாள்!: ��ி. ருத்ரகுமாரன்



இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்! தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்!

விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்; சந்தித்;த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.

மாவீரர்கள் நமது தேசத்தின் இருளகற்ற ஓயாது ஒளிர்ந்த ஒளிவிளக்குகள்.

தமது அற்புதமான வாழ்வினூடாகவும் வீரச்சாவினூடாகவும் இவர்கள் தமிழீழ தேசத்தின் சுதந்திர வேட்கையினை உணர்த்தி நின்றார்கள். உலகப்பந்தில் தமிழீழ தேசத்தின் புள்ளியினைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

சின்னஞ் சிறிய தமிழீழத் தேசம் தனது விடுதலைக்காக, கௌரவமான, பாதுகாப்பான, சமத்துவமான வாழ்வுக்காக எத்தகயை பெரும் விலைகளையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதனை நமது மாவீரர்கள் உலக வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்து நின்றார்கள்.

மாவீரர்களுக்குரிய இந் நாள் நமது தேசத்தின் வீர வரலாற்றின் நினைவுநாள். நமது தேசத்தின் அதி உயர்ந்த பெருமைக்குரிய நாள்.

மாவீரர் ஈகத்தினை கனத்த நெஞ்சங்களுடன் நினைவுகூர்ந்து அவர்கள் உள்ளுணர்வுகளை நமக்குள் நாமே ஆழமாக உள்வாங்கிக் கொள்ளும் நாள்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலட்சியக் கனலை நமக்குள் நாமே எரிய விட்டுக் கொள்ளும் நாள்.

இம் மாவீரர்களை ஈழத்தமிழர் தேசம் மட்டுமல்ல தமிழகம் மற்றும் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இன்றைய மாவீரர் நாளில் வணங்கி நிற்கிறார்கள்.

மாவீரர்கள் நமது சிறிய தேசத்தின் விடுதலை உணர்வின் குறியீடு. அடக்கு முறைக்கு அடிபணிய மறுத்த அளப்பெரும் வீரத்தின் குறியீடு. தன்னலமற்ற ஈகத்தின் குறியீடு. உலகின் பெரும் சக்திகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனது சக்தியெல்லாவற்றையும் திரட்டிப் போராடிய நமது தேசத்தின் பெருமையின் குறியீடு.

இந்தக் குறியீடு, இக் குறியீட்டின் ஆன்மீகசக்தி இன்று சிங்களத்தை அச்சுறுத்துகிறது. ஈழத் தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கும் தமது திட்டத்துக்கு மாவீரர்களின் நினைவுகள் தடையாக அமைந்து விடுமென அஞ்சுகிறது. தமிழீழம் என்ற ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை மாவீரர் என்ற குறியீடு உயிர்ப்பாகப் பேணி விடுமோ என்று பதைபதைக்கிறது.

இதனால் மாவீரர்கள் துயில்வதற்காக அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்களை அழித்துச் சிதைத்தது மட்டுமன்றி மாவீரர் நினைவுகளை மக்கள் மத்தியில் இருந்து அகற்றி விடுதவற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுக்கிறது.

மாவீரர் நினைவாக ஆலயங்களில் பூசைகள் வழிபாடுகள் நிகழ்ந்து விடுமோ என அந்தரிக்கிறது. மாவீரர்களுக்காக மக்கள் விளக்கு வைத்து வழிபட்டு விடுவார்களோ எனப் பதைபதைத்து மக்களை அச்சுறுத்துகிறது.

மாவீரர் நாளாகிய இன்று நமது தாயக மண்ணில் ஆலயங்களில் ஒலிக்கும் ஒவ்வொரு மணிஒலியிலும் நமது மக்கள் எம் மாவீரர் முகங்களைக் காண்பார்கள். மக்கள் தமது வீடுகளிலும் கோவில்களிலும் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திலும் நமது மாவீரர்கள் ஒளிர்வார்கள்.

எத்தகைய இராணுவ அச்சுறுத்தல்கள் ஊடாகவும் நமது மக்களின் மனக்கோவில்களில் விரியும் மாவீரர் நினைவுகளை சிங்கள இராணுவத்தால் அகற்றி விடமுடியாது.

மாவீரர் நினைவுகள் நமது மக்களுக்கு, தேசத்துக்கு என்றும் காவலாகவே இருக்கும். அந்நினைவுகள் தான் விடுதலை இலக்கு நோக்கி நமது தேசத்தை வழி நடாத்தும்.

அன்பான மக்களே!

ஈழத் தமிழர் தேசம் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் நிற்கிறது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்குரலை நசுக்கி விடலாம் என்ற சிங்களத்தின் திட்டம் தோல்வியடைந்து வருகிறது.

ஈழத் தமிழர் தாயகத்தில், தமிழர் அடையாள அரசியலை அழித்து சிறிலங்கா அடையாள அரசியலை நடைமுறைப்படுத்தும் சிங்களத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இராணுவ அச்சுறுத்துல்களுக்கும் அரசின் ஆசைவார்த்தைகளுக்கும் மத்தியிலும் தாயகத் தமிழ் மக்கள் சிங்களத்திடம் அடிபணியவில்லை.

போதிய அரசியல் வெளி இல்லாத காரணத்தால் தமது சுதந்திரவேட்கையினை தமக்குள் புதைத்து வைத்திருந்தாலும் தேசம் என்ற தகைமைக்குரிய மக்களாகவே தாயக மக்கள் தமது அரசியல் முடிவினை எடுத்து வருகிறார்கள்.

புலம் பெயர் தமிழ்மக்கள் தமக்குரிய அரசியல்வெளியினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதுடன் இனப்படுகொலை புரிந்த, இன்றும் புரிந்து வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களை உள்ளடக்கிய ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எவ்வாறு?

ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பான, நமது மாவீரர்களின் இலட்சியக்கனலான தமிழீழத் தனியரசு குறித்து முன்னேறுவது எப்படி?

இதனைக் களமும் புலமும் இணைந்தபடி சாத்தியப்படுத்துவது எவ்வாறு?

தற்போதய சூழலில் ஈழத் தமிழர் தேசம் அனைத்துலக ஆதரவினைத் தனது பக்கம் வென்றெடுக்கும் நகர்வினை அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

அனைத்துலக அரசுகளை ஈழத் தமிழர் தேசம் தர்மம், நீதி, நியாயம் என்ற தார்மீக மொழிகளில் மட்டும் பேசி வென்றெடுக்கமுடியாது. சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கு தர்மத்தின் மொழிகளுக்கு கட்டுப்படுவதில்லை.

இதனால், அனைத்துலக சமூகத்தினை நமது பக்கம் வென்றெடுப்பதற்கு பலமிக்க அனைத்துலக அரசுகளின் நலன்களுடனும் நிலைப்பாடுகளுடனும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களையும் நிலைப்பாடுகளையும் பொருந்தச் செய்ய வேண்டியது அவசியமாக அமைகிறது.

அனைத்துலக சமூகத்தின் பார்வையில்;, குறிப்பாக வௌ;வேறு அரசுகளின் பார்வையில் இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் இல்லாத, அதேவேளை நாடு எவ்வகையிலும் பிரிக்கப்படாத வகையில் ஒரு அரசியல்தீர்வு தமிழர் பிரச்சனைக்குக் காணப்படவேண்டும் என்ற நிலைப்பாடே தற்போதும் உள்ளது.

இங்கு அரசுகள் என்பதனை நான் வலியுறுத்துவதற்குக் காரணம் உண்டு. நீதி தொடர்பாக அரசுகளினதும் அந்தந்த நாட்டு மக்களினதும் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

அரசுகள் தமது முடிவுகளை நீதியின் அடிப்படையில் இன்றி நலன்களின் அடிப்படையில் எடுப்பவை. சில சந்தர்ப்பங்களில் நீதியும் பலம் வாய்ந்த அரசுகளது நலன்களும் ஒன்றாகச் சந்திப்பதுமுண்டு.

அரச இயந்திரம் ஆனது ஆடை அணிவதில்லை என்றும் அதனால் அதற்கு வெட்கம் மானம் போன்றவை எதுவும் இருப்பதில்லை என்றும் சிலர் கூறுவார்கள்.

இத்தகைய அரசுகளைத்தான் இன்று ஈழத்தமிழர் தேசம் தனக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டியுள்ளது.

2009ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன என்று விடுதலைப்புலிகள் அமைப்பு எடுத்த நிலையின்பின் ஈழத்தமிழர் மத்தியில் தாயகத்திலும்சரி புலத்திலும்; சரி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்துமே அரசியல் இராஜதந்திரவழிமுறைகளின் பாற்பட்டுத் தான் அமைந்து வருகின்றன.

இதனால் அனைத்துலகச் சமூகத்தினது ஆயுதப்போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டுக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் தற்போதய நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவை ஒரேபுள்ளியில் சந்திக்கின்றன.

ஆனால் தமிழீழத் தனியரசு தொடர்பான விடயத்தில் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்புக்கும் அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.
புலத்தில் உள்ள ஜனநாயகவெளியின் காரணத்தால் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள் தமிழீழத் தனியரசுக்கான செயற்பாடுகளைச் சகித்துக் கொள்கின்றன.

ஆனால் அவர்களின் தற்போதய எண்ணமெல்லாம் புலம் பெயர் தமிழ் மக்கள் தமது நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

விடுதலைக்காகப் பேராடும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் நமது இலக்கு நோக்கி அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க நாம் முயலவேண்டுமேயன்றி அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகளுடன் கண்மூடித்தனமான சமரசங்களைச் செய்ய முடியாது.

இதனால், அனைத்துலக அரசுகளின் விருப்பங்களுக்குப் பின்னால் நமது தேசங்களின் நலன்களையெல்லாம்; துறந்துவிட்டு நாம் ஓட முடியாது. இதேவேளை ஒரு சிறிய தேசமான நாம் பலம் மிக்க அனைத்துலக அரசுகளிடம் இருந்து அந்நியப்படவும் முடியாது.

இதனாலேதான் மிக நுட்பமான முறையில் நாம் களத்திலும் புலத்திலும் உள்ள நிலைமைகளுக்கேற்ப காய்களை நகர்த்தி இச் சிக்கலைக் கையாள வேண்டியுள்ளது.

தமிழீழம் சாத்தியமற்றது என்ற காரணத்தைக்கூறியோ அல்லது பலமுள்ள அரசுகள் அதனை ஏற்றுக் கொள்ளாது என்ற காரணத்தை முன்வைத்தோ தமிழீழ இலக்குக் குறித்து எவரும் தடுமாறக்கூடாது. தடுமாறவும் முடியாது.

ஏனெனில் அனைத்துலக சூழல் என்பது அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகள் என்பன மாற்றத்துக்குள்ளாக முடியாதவை அல்ல. நாம் நமது விடுதலைக்கனலை உயிர்ப்பாக வைத்திருப்பதன் மூலம்தான் மாறிவரக்கூடிய அனைத்துலகச் சூழலை நமது இலக்கு நோக்கிக் கையாள முடியும்.

அதேவேளை தாயகத்தில் இன்றுள்ள அரசியல்வெளி மறுக்கப்பட்ட சூழலின் காரணமாக தமிழீழத் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழீழ இலட்சியத்தை தமது நிலைப்பாடாகக் கொண்டு செயற்பட முடியாத நிலை இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக அரசுகளைக் கையாள்வதில் தாயகத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு.

தனித் தமிழீழத்தைத் தமது நிலைப்பாடாகக் கொண்டு இவர்கள் செயற்படாத காரணத்தால் அனைத்துலக அரசுகளுடன் உறவுகளை வைத்துச் செயற்படுதல் இவர்களுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும். அனைத்துலக அரசுகளும் இதனை விரும்பும்.

இதனை இன்று தாயகத்தில்; தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கூடுதலாகச் செய்து வருகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அனைத்துலக அரச பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்துகிறது.

இவை ஈழத்தமிழர் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் வியூகத்தின் ஒருபடியாக அமையக் கூடியவை.

ஈழத் தமிழர் தேசத்தினது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தனியரசுக்கான பயணத்துக்கு இது அவசியமானதும்கூட.

அனைத்துலக அரசுகளின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில், அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சிங்களம் ஒரு போதும் ஈழத் தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களைக்கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மகிந்த ராஜபக்ச சிங்களத்தின் சார்பில் முன்வைக்கும் ஒரு நாடு - ஒரு மக்கள் என்ற கொள்கையானது தமிழர்களை பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்துக்கிணங்க – அவர்கள் தீர்மானிப்பதற்கிணங்க வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பதுதான்.

ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் தம்மை அடையாளப்படுத்துவதும் இவ்வாறு அடையாளப்படுத்துவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருப்பதும் சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாகவே உள்ளது.

இதனால் தமிழர் தேசத்தைக் கரைத்து சிங்களப் பெரும்பான்மைக்குள் விழுங்கிவிடுதவற்கு சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது.

இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் திட்டமோ அல்லது விருப்போ சிங்களத்திடம் இல்லை.

மக்கள் ஆணையினைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு அருகில்கூட சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பால் முன்னேற முடியாது. எனினும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெறுவதற்காக இவர்கள் தமது முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல்; தீர்வாகக் குறைந்தபட்ச ஏற்பாடுகளுக்குக்கூடத் தயாராக இல்லை என்பதனை பச்சையாக அனைத்துலகச் சமூகத்தின் முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோலுரித்துக் காட்டும்போது தமிழீழ மக்களின் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைப்பாடு வலுப்பெறக்கூடிய நிலை ஏற்படும்.

இது அனைத்துலகச் சமூகத்தின் மத்தியில் தமிழீழத் தனியரசு தொடர்பான நமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வாய்ப்புக்களைத் தரும்.

மேலும், சிங்கள அரசும் அனைத்துலக சமூகமும் தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையும் சிறிலங்காவில் எதிர்காலத்தில் தோற்றம் பெறும்.

சிறிலங்கா அரசு தற்போது முற்றிப் பழுத்த ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அரசாக உள்ளது.

சிறிலங்காவின் பாராளுமன்றம், நிர்வாக இயந்திரம், நீதித்துறை, இராணுவக் கட்டமைப்பு, ஊடகங்கள் அனைத்துமே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிலையான தூண்களாக உள்ளன. சிங்கள பேரினவாதத்தின் காவல் பூதங்களாக உள்ளன.

ஆதலால் சிங்களத்தின் ஆட்சிபீடத்தில் இருக்கும் எவரும் அல்லது இனிமேல் ஆட்சிபீடம் ஏறும் எவரும் சிங்கள பௌத்தத்தின் உண்மையான சேவகனாகத்தான் இருக்க முடியும்.

முன்னர் இருந்ததைவிட சிங்கள இராணுவம் அரசியல் பலமிக்க அதிகாரக் கட்டமைப்பாக உருப்பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் மேற்குலகின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு தாராளவாத அரசாக சிறிலங்கா அரசு மாற்றமடையாது.

சிங்கள அரசினை மேற்குலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றுவதற்கு சிங்களத்தலைவர்கள் எவரும் முயன்றால் இவர்களை சிங்கள பௌத்த தேசியவாதம்; அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். தேர்தல்களில் இவர்களைத் தோல்வியடையச் செய்யும்.

இதனால் சிறிலங்காவை தான் விரும்புகிற ஒரு தாராளவாத அரசாக மாற்றியெடுக்கும் மேற்குலகத்தின் திட்டமும் வெற்றியடையப்போவதில்லை.

இதனால் மேற்குலகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே ஒரு முறுகல்நிலை வலுவடையக்கூடிய நிலைமைகள் உள்ளன.

மேலும் புவிசார் அரசியல் தளத்திலும் சிறிலங்காவில் தமது நலன்களை அடைந்து கொள்ளும் போட்டியில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே ஒருவகைப் பதட்டம் இருக்கிறது.

இலங்கைத்தீவில் சீனாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கூடுதல் அக்கறையாக இருக்கிறது.

இந்தப் புவிசார் அரசியல் சார்ந்த முரண்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை ஒரு வகைக் கொதிநிலையில் வைத்திருக்கவே வழிகோலும்.

இத்தகைய முரண்பாடுகளின் தர்க்கரீதியான வளர்ச்சிப்போக்கில் ஈழவிடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் கனிந்து வரும் என நாம் திடமாக நம்புகிறோம்.

ஈழத்தமிழர் தேசம் தன்வசமிருந்த வன்வலுவினை (hard power) இழந்து விட்டிருந்தாலும் தனது ஏனைய வளங்களை ஒருங்கு திரட்டி தனக்கான மென் வலுவினை (soft power) சாதுரியமாகப் பயன்படுத்துவதன் மூலம் (exercising the soft power in a smart way) தனது இலக்கு நோக்கி முன்னேறும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஈழத் தமிழர் தேசத்தின் புவியியல் அமைவிடம், தென்னாசியாவின் மாறி வரும் புவிசார் அரசியல், 60 மில்லியன் தமிழகத் தமிழர்கள், 1 மில்லியன் புலத்து ஈழத் தமிழர் சமூகம், அந்தந்த நாட்டு அரசியல்களில் சென்றிணையும் இரண்டாம், மூன்றாம் ஈழத் தமிழர் தலைமுறை, சிறிலங்கா அரசின் மீது விழுந்துள்ள சர்வதேசக் குற்றச் சாட்டுக்கள், இராஜதந்திர பாதுகாப்புத் தொடர்பாக மாறிவரும் சர்வதேச சட்ட நிலைப்பாடு, எமது அரசியல் கோரிக்கையின் தார்மீக, சட்ட வலு, சிறிலங்கா அரசின் பேரினவாத நிலைப்பாடு - இவை அனைத்தும் இணைந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்துக்கு உரிய அரசியல்வலுவைத் தரக்கூடியவை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாகப் பரிணாமம் பெற்று வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நமது மாவீரர்களின் அளப்பெரும் வீரத்தாலும் ஈகத்தாலுமே ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகப் பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

ஒரு நாட்டின் தேசியப்பிரச்சினை என்பது பொதுவாக அந் நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினையாக மட்டும் இருப்பதில்லை. இது அனைத்துலகப்பரிமாணம் கொண்ட பிரச்சினையாகவே இருப்பதுண்டு.

இந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினை இலங்கைத்தீவினுள் மட்டுமே சுருங்கி விடும் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. இது ஒரு அனைத்துலகப் பரிமாணம் கொண்ட பிரச்சினை.

இதனால் அனைத்துலக சமூகத்தைக் கையாள்வதற்குரிய முறையில் ஈழத்தமிழர் தேசம் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையினைக் கொண்டிருப்பதும் மிகவும் அவசியம். இத்தகைய ஒரு பின்னணியுடன்தான் நாம் தற்போதய காலகட்டத்து விடுதலைப்போராட்டத்தை அணுக வேண்டும்.

இப் போராட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு பாத்திரம் உண்டு. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, தேசிய மக்கள் அவைகள் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் அரசியல் முனைப்புக் கொண்ட அமைப்புக்கள் - அவை யாவற்றுக்குமே இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு பாத்திரம் உண்டு.

இந்தப் பாத்திரங்களை ஒவ்வொரு அமைப்புக்களும் தமக்கிடையேயான ஒரு புரிதலுடன் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தலும் ஒரு பொது மூலோபாயத்தின் அடிப்படையில் பொது உடன்பாட்டுக்கு வருதலும் காலத்தின் தேவையாகும்.

இவ் விடயத்தில் தாயகத்தில் உள்ள அமைப்புக்களும் புலத்தில் இயங்கும் அமைப்புக்களும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் அமைந்த வெவ்வேறு வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் சென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்குள் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இந்தத் திசையினை நமது மாவீரர்கள் நமக்குள் காட்டி நிற்கிறார்கள்.

மாவீரர்கள் காட்டி நிற்கும் அந்த இலக்கு நோக்கி எமது போராட்டத்தினை இட்டுச் செல்லும் பணிக்கென சென்ற ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களின்போது உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் தமிழக உணர்வாளர்கள் எல்லோரது ஆதரவுடனும் எமது அமைச்சுக்களினூடாகவும் வெளியேயும் பல்வேறு முனைகளில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அனைத்துலக அரங்கில் எம்மை நிலை நிறுத்துவதும், அனைத்துலக சமூகத்தை இராஜதந்திர வழிமுறைகளின்படி கையாளுவதும் நாம் கட்டியெழுப்பும் எமக்கான மென்வலுவில் தங்கியுள்ளது.

இப்பணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முதன்மைப் படுத்திச் செயற்பட்டு வருவதோடு இது பற்றிய பரந்த விவாதத்தினை எதிர்வரும் தமது மூன்றாவது அமர்வின் போது மேற்கொள்ளவும் இருக்கிறது.

அன்புக்குரிய மாவீரர் பெற்றோரே! குடும்பத்தினரே!!

நமது தேசம் மாவீரர்கள் தேசம். நமது தேசத்தின் உன்னதமான மனிதர்களான உங்கள் பாசத்துக்குரிய பிள்ளைகளின், உறவுகளின் பிரிவுத்துயரில் தமிழர் தேசமே மூழ்கி நிற்கிறது.

சோகத்தில் துவண்டு விடாமல் தமிழீழ விடுதலை இலக்கு நோக்கிப் பயணிக்கும் உறுதியினையும் மாவீரர் நினைவுகள் நமக்குத் தருகின்றன.

தாயகத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக, நம் உறவுகள் ஒரு விளக்கு ஏற்றி வைக்கும் உரிமைகூட உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைவரையும் ஒரே நாளில் நினைந்து வணங்கி உறுதிபெறும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாவீரர்நாள் அமைந்து வந்தது.

இந்தப் பண்பாட்டுவெளியினையும் சிங்களம் நம்மிடம் இருந்து பறித்திருக்கிறது.

தங்கள் பிள்ளைகள், உறவுகள் துயில்வதற்கான இல்லங்களும் சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளனின் கால்கள் பட்டு நமது தாயக தேசம் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

உங்கள் பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காக நமது தேசத்தின் மாவீரர்களுக்காக தாயக மக்கள் நிச்சயம் ஒரு விளக்கினைத் தமது வீடுகளில் ஏற்றுவார்கள். தமிழீழ தேசத்தின்; ஆலயங்களிலும் கோவில்களிலும் ஒலிக்கும் மணி ஒலிகள் நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் உறவுகளின் பெயர் சொல்லும்.

நீங்களும் நமது தேசத்தின் மதிப்புக்குரியவர்களாக எமது நெஞ்சங்களில் இருப்பீர்கள்.

இன்று சுவிஸ் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் புலத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக இனிமேல் எடுக்கப்படவிருக்கும் நினைவாலயங்களுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

உங்கள் பிள்கைளகளின், உறவுகளின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

அன்பான மக்களே!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்' என்பார்கள்.

தற்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தர்மம் மறுபடியும் நிச்சயம் வெற்றி பெறும்.

தர்மம் வெற்றிவாகை சூடும் போது இன்று நமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் நமது மண்ணை விட்டு அகன்றிருப்பார்கள்.

நமது தேசம் நிச்சயம் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து நிற்கும்.

இது நாம் கண்டு நிற்கும் கனவு மட்டுமல்ல. எதிர்காலத்தில் நிதர்சனமாகப் போகும் வரலாற்றின் சாத்தியப்பாடு.

இந்ந நிலையை உருவாக்கி நமது மாவீரர் நினைவுச் சின்னங்களை நமது மண்ணில் நாம் மீளக் கட்டியெழுப்புவோம்.

சிங்களத்தால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் மீண்டும் புத்துயிர் பெற வைப்போம்.

தமது கனவுகள் நனவாகி விட்டன என்ற நிறைவுடன் விடுதலையடைந்த ஈழத் தமிழ்ப் பூமியில் நமது மாவீரர்கள் அமைதியாக உறங்குவார்கள்.

உலகின் ஏனைய சுதந்திர மக்கள் போல நமது மக்களும் சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக, சமத்துவத்துவத்துடன் வாழ்வார்கள்.

இந் நிலை உருவாகும் வரை நாம் நமது இலட்சியப்போராட்டத்தினை ஓயாது முன்னெடுப்போம் என நமது மாவீரர்கள் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோமாக!

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger