சபரிமலையில் ஆண் வேடம் அணிந்து நேற்று காலை 18ம் படி ஏற முயன்ற ஒரு இளம்பெண் பிடிபட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களை கண்காணிக்க பம்பையில் ஏராளமான பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 40 பேர் அடங்கிய ஒரு பக்தர்கள் குழு சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் சிறுவர், சிறுமியர் மற்றும் வயதான பெண்களும் இருந்தனர். இவர்களுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் இருந்துள்ளார். அவர் ஆண் போல கருப்பு வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார்.
கூட்டமாக சென்றதால் இவரை போலீசார் கவனிக்கவில்லை. இந்த குழுவினர் சரங்குத்தி பகுதியை தாண்டி சன்னிதானத்தை அடைந்தனர். பின்னர் 18ம் படி அருகே தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவரது பெயர் தேவி என்பதும் தனது கணவர் நாயுடுவுடன் சபரி்மலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரை உடனடியாக போலீசார் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சபரிமலையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?