இதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.
என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இந்த மாவீரர்நாளிலும்...?இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.
வீழ்வதற்கு தயாராக நிற்கும் கண்ணீர்த்துளிகளுடன் எங்கள் தேசத்துச் செல்வங்களை நினைத்து கைகூப்பி தொழுவோம். நெஞ்சுருகுவோம். மணியடித்து எழுந்துவரும் மாவீரர் பாடல் 'ஒளியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீதும் உறுதி' பாடலுக்கு எல்லோரும் ஒன்றுகூடி தீபம் ஏற்றி நிற்போம்.
இத்தனையும் நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்தான். எங்களுக்காக தங்களையே அர்ப்பணித்து மரணித்த எம் மாவீரர்களுக்கான நன்றியாக இத்தனையும் செய்தே ஆகவேண்டும். ஆனால் அதன் பின்னர்.....?இத்தனையும் செய்துவிட்டு வீடு திரும்பி எல்லா நினைவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் இயந்திர வாழ்வினுள் கரைந்துவிடப் போகின்றோமா?
ஏதோ ஒரு சடங்குக்காக போய் மலர்தூவி வந்துவிட்டால் மட்டுமே போதுமா? போன மாவீரர் நாள் இதோ முந்தாநாள்தான் வந்துபோனது போல கண்ணுக்குள் நிற்கிறது. போன மாவீரர் நாளில் தூவிவிட்டுவந்த கார்த்திகைப் பூவின் வாசம் இன்னும் கைகளுக்குள் மணக்கிறது.
போன மாவீரர் நாளிலும் போனோம், வந்தோம். ஒரு வருடமாகிப் போகிறது. மாவீரரின் கனவை நனவாக்க என்ன செய்தோம் இந்த ஒரு வருடத்தில்...?எம் நெஞ்சைத்தொட்டு பதில் கேட்டால் வெறுமைதான் பதிலாக எழுகிறது.
இம்முறையும் அவ்வாறே போய்வந்து பூத்தூவி, பாப்புனைந்து மீண்டும் அடுத்த வருட மாவீரர் நாளில் சந்திப்பதாக சொல்லி வர போகின்றோமா??மாவீரர் நாள்! சொல்லும்போதே நெஞ்சு விம்மவில்லையா. இதயத்துக்குள் சுடர் ஒன்று எரியும் உணர்வு மேலிடவில்லையா.. ஒவ்வாருவராக கண்களுக்குள் மாவீரர் நினைவு வந்து போகவில்லையா...
எத்தனை உயரிய தியாகங்களின் கூட்டு நினைவு நாள் இது. எத்தனைவிதமான அர்ப்பணங்கள். சுற்றிவர எதிரி சூழ்ந்துநின்ற போதிலும் காயமடைந்த தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தப்பும்படி இறுதி நேரத்து வேண்டுகோள் விடுத்து வீரச்சாவு கண்டவர்கள்,
அதனையே நிறைவேற்ற தயங்கிய தோழனிடம் தன்னைச் சுட்டுவிட்டு தப்பும்படி உத்தரவிட்டு மரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள்,
எதிரிக்கு தனது முகம் தெரிந்துவிட்டால் நடக்க திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகள் முடங்கிவிடும் என்பதால் கொழுந்துவிட்டெரியும் தீக்குள் தமது முகம் கருக்கி மரணித்தவர்கள்,
ஆயுதமும் சயனைட்டும் இல்லாத ஒருபொழுதில் தப்பிக்க இனி சந்தர்ப்பம் ஏதும் இல்லையென்று நிச்சயமாக தெரிந்துகொண்டு மரக்கிளையிலும்,சுவரிலும்,மருத்துவமனைக்கட்டிலிலும் தமது தலைகளை பலம்கொண்டு மோதி மரணத்தை ஏற்ற வேங்கைகள்,
கடற்பயணங்களின்போது வெடித்த படகுகளில் இருந்து தான்மட்டும் நீந்தி தப்பிக்காமல் நீந்ததெரியாத தோழனையும் காப்பாற்ற இறுதிவரை முயற்சித்து அவனுடனேயே கடலுடன் சங்கமமானவர்கள்,
வல்லாதிக்க கடற்படை சுற்றிவர நின்று சரணடை என்று எக்காளமிட்டபோது அவன் முன்னாலேயே கப்பலை குண்டுவைத்து தகர்த்து தீயுடன் கருகியவர்கள்,
சிறியதோ பெரியதோ எதுவாகினும் அது எதிரியின் காவலரண் ஆகின் அதனை மீட்கும் முயற்சியில் வெட்டவெளியில் குண்டுமழைக்குள்ளாக இரத்தக்குளியல் செய்தவர்கள்,
தப்பி ஓடும் எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்காக தான் இருக்கும் இடத்தையே குறிவைத்து எறிகணைகளை வீசும்படி கூறிவிட்டு போய்விட்டவர்கள்....
இப்படி..இப்படியாக வார்த்தைகளாலும் வர்ணிப்புகளாலும் கூறிவிடமுடியாத ஈகங்களை நினைந்து வணங்கி துதிக்கும் நாள் இது. இது வெறுமனே ஒரு திகதி அல்ல. விடுதலைக்காக ஒரு இனம் செய்துவிட்ட அளப்பெரும் தியாகங்களின் மொத்த நினைவு.
விடுதலைக்காக இந்த இனத்தின் மனிதர்கள் தமது இனிய உயிரையும் அர்ப்பணிக்க எழுந்து நின்றார்கள் என்பதன் ஒரே நிரூபணம் மாவீரர் நாள்.
பேதங்களும் கூறுகளும் நிறைந்த தமிழர் தாயகத்தின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை ஒரே தலைமையின் கீழ் விடுதலைக்காக உயிரையும் தியாகம் தரத்தயாராக ஆயிரமாயிரமாய் தமிழினம் திரண்டது என்ற வரலாற்றுப் பதிவுதான் மாவீரர் நாள்.
எப்படியான ஒரு பொழுதில் இம்முறை மாவீரர் நாள் வந்துள்ளது. மிகவும் ஒரு அவலமான ஒரு பொழுது எங்கள் இனத்துக்கு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எங்களின் தாய்மண் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தனது தேசிய அடையாளத்தை இழந்து குறுகிக்கொண்டிருக்கிறது.
பாரம்பரிய தமிழர்நிலம் என்ற தேசியக்கூறு மிகவும் கெட்டித்தனமாக சிங்களத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.
எமது மக்கள் ஒருவகையான பேரின இராணுவ மேலாண்மைக்குள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படியான வாழ்வே அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக ஆக்கப்பட்டும் வருகின்றது.
பெருமரத்தை பற்றிப்படர்ந்து சுற்றி வளரும் சிறுகொடிகள் போல எம் இனம் ஆக்கப்பட்டு வருகிறது.
எல்லாவற்றிலும் மேலாக எங்கும் வறுமையே கோலோச்சுகிறது.
குழந்தைகளுக்கு வயிறார உணவு கொடுக்கவும் முடியாத ஏக்கத்தில் பெற்றோர் பேதலித்து போயிருக்கிறார்கள்.
அன்றாட உழைப்புகள் ஏதுமில்லாமல் கையேந்தும் நிலையில் எம் இனம் வீதியில் நிற்கிறது.
இப்படியான ஒரு கொடும்துயரப் பொழுதில்தான் மாவீரர் நாள் வந்திருக்கிறது.
இந்த மக்களின் நிம்மதியான சுபீட்சமான வாழ்வுக்காகவே மாவீரர்கள் தங்களையே ஆகுதி ஆக்கினார்கள்.
மாவீரர்களை வணங்கிவிட்டு அவர்கள் நேசித்த இந்த மக்களை மறந்துவிடப் போகின்றோமா? மாவீரர்கள் எம்மிடம் எதிர்பார்த்தது எது?
மாவீரன் ஒவ்வொருவனும் வீழும்போதும் அவனது கனவும், அவனது விருப்பமும், அவனது எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான். தாங்கள் நெஞ்சுக்குள் தாங்கி போரிட்ட இலட்சியக்கனவை வென்றெடுக்க நாளை நாம் ஒன்றாக கூடுவோம் என்பதுதான்.
எதிரியும் எதிரிக்கு முண்டு கொடுத்த சக்திகளும் எம்மை வென்றது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் இத்தனை அழிவுக்கு பின்னரும் நாம் ஒன்றுபடாமல் சிதறிப்போய் நிற்கிறோமே அதுதான் மோசமானது.
இந்த மாவீரர் தினத்துடன் அனைவரும் ஒன்றிணையும் சபதம் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும்.
எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான்.
வெறும் சம்பிரதாயமான நினைவாக நின்று திரும்பாமல் மனங்களுக்குள் உறுதி எடுப்போம்.
விடுதலைப்போரின் விழுக்காயங்களாக வறுமையுடன் அல்லல்படும் போராளிக் குடும்பங்களையும் சிறையில் வாடும் எம் உறவுகளையும் கைதூக்கி விடுவோம் என்றும், மாவீரர் கண்ட கனவான சுதந்திரவாழ்வை பெற்றுத்தர ஓயாது செயற்படுவோம் என்றும் உறுதிகொள்வோம்.-
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
http://actressmasaala.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?