தமிழ் பேசும் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பவர்களால் இயக்கப்படும் சக்தியே "கிறீஸ் பூதம்" என்றழைக்கப்படும் மர்ம மனிதர்கள். நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுற்று இரண்டாண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன.
போரின்போது அரங்கேற்றிய போர்க்குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கைகளை தொடர்ந்தும் முன்வைக்கும் இவ்வேளையில், தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி ஒரு கல்லில் பல கனிகளை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது மகிந்தவின் அரசு.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழர் பகுதிகளில் வன்முறையில் இறங்கியுள்ள கிறீஸ் பூதங்கள் பெண்களிடமே அதிகளவில் தமது சேஷ்டைகளை செய்கிறார்கள். குறித்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமது அடையாளத்தை மறைப்பதற்காக கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் கிறீஸ் பூதங்கள் என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள்.
குறித்த மனிதர்களின் இலக்கு பெண்களிடம் திருடுவதோ, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வோ இல்லை. மாறாக, குறித்த மனிதர்கள் பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பல இடங்களில் பதிவாகியிருக்கிறது.
இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை சிங்கள அரச படையினர் காப்பாற்றி தம்மோடு அழைத்துச் செல்வது தினமும் நடந்து வருகிறது. இதனைக் கண்டு பல ஊர் மக்கள் திரண்டு குறித்த இராணுவ காவலரண்களைத் தாக்கிய சம்பவங்களும் உண்டு.
இதிலிருந்து சிங்கள அரச படையினரோ அல்லது அவர்களின் அடிவருடிகளோதான் குறித்த கிறீஸ் பூதங்கள் என்பது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் புலப்படுகிறது.
உண்மையான காரணங்கள் என்ன?
பல காரணங்களை முன்வைத்தாலும், அவைகளில் முக்கியமான காரணங்களை அலசுவது சாலச்சிறந்ததாக இருக்கும். மே 2009-இல் முடிவுக்கு கொண்டுவந்த நான்காம் கட்ட ஈழப்போரின் போது ஏற்படுத்திய மனிதப்பேரவலத்தை மூடி மறைத்து, உலக நாடுகளைத் திசை திருப்ப இப்படியான சம்பவங்கள் சிறிலங்கா அரசுக்கு உதவும்.
சிறிலங்கா அரசிற்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் தமிழருக்கு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள். அத்துடன், தமிழர் பிரதேசங்களில் தரித்து நிற்கும் படையினரை அப்புறப்படுத்த வேண்டுமென்கிற குரல் பரவலாக ஓங்கி ஒலிக்கிறது.
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போது இல்லை என்கிற காரணத்தினால், குறிப்பாக சிறிலங்காவில் கடந்த இரு வருடங்களாக எவ்வித தாக்குதலையும் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் படையினர் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை இல்லை என்கிற வாதம் எழுகிறது.
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு படையினர் தம் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பொது மக்களின் காணிகளை உரிமையாளர்களிடமே மீண்டும் கொடுக்க வேண்டுமென்கிற குரல் பரவலாக பல நாடுகளினால் கோரப்படுகிறது.
தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் படையினரின் தொல்லைகளின்றி சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இப்படியாக சிங்களப் படையினருக்கு எதிராக அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் சிங்கள அரசிற்கு தேவைப்பட்ட கருவியே கிறீஸ் பூதங்கள்.
படையினரை வாபஸ் வாங்குவதை விடுத்து, இன்னும் பல அரச படை முகாம்களை நிறுவவும் தேவைப்பட்ட ஆயுதமே கிறீஸ் பூதங்கள். தமிழரின் நிலங்களை அபகரித்துக்கொண்ட சிங்கள இராணுவம், அவற்றை சிங்கள மக்களுக்கு தாரை வார்க்கவும் மற்றும் புத்த விகாரைகளை அமைக்கவும் உதவ தேவைப்பட்ட கருவியே கிறீஸ் பூதங்கள்.
தமிழரின் பிரதேசங்களில் அமைதி இன்னும் திரும்பவில்லை என்பதை உலகத்திற்கு காட்டி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடிக்க தேவைப்பட்ட பூதங்களே குறித்த மர்ம மனிதர்கள்.
உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு பின்னர் ஏதோ தனது அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப்போவதாக அறிக்கை விட்டார் மகிந்த ராஜபக்ச.
குறித்த தடையை நீக்குவதற்கு முதலிரவே குறித்த சட்டத்திற்கு மாற்றுச் சட்டத்தை அமுல் படுத்தினார். அமுலப்;படுத்திய சட்டத்திற்கும், முன்னிருந்த சட்டத்திற்கு அதிக வேறுபாடுகள் இருக்கவில்லை. உலக நாடுகளை ஏமாற்ற வேண்டுமென்கிற வகையிலேயே செயற்பட்டார் ராஜபக்ச.
புதிதாக அமுலுக்கு வந்த சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கவே உருவாக்கப்பட்ட சிறப்பு படையணியே குறித்த கிறீஸ் பூதங்கள் என்று தமது ஆதங்கங்களை தெரிவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.
யுத்த காலத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்குச் சட்டம் மறைமுகமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலை தோன்றியுள்ளது. வீடுகளில் விளக்குகளை அணைத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. இவைகள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்துமுடிக்க தேவைப்பட்ட ஆயதமே கிறீஸ் பூதங்கள்.
ஒரு ஜோதிடரின் பரிகாரமாகவே சிறுபான்மை இனப் பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என சில உள்ளூர் ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் கருத்து என யாழ்ப்பாணத்தில் வெளியாகும் இன்னுமொரு தகவல். எது என்னவாக இருந்தாலும், மகிந்தா அரசின் ஈழத் தமிழர் மீதான போருக்கு ஒத்ததான இன்னொரு வடிவமே கிறீஸ் பூதங்கள்.
தமிழர் பிரதேசங்களில் நிம்மதியைக் குலைத்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை அழிப்பதே சிங்கள அரசின் நோக்கம். இதனையே கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக சிங்கள அரசு செய்து வருகிறது. தான் செய்யும் இனச்சுத்திகரிப்பை மறைத்து, பயங்கரவாதம் மட்டுமே சிறிலங்காவில் இருந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டுவிட்டு போரை ஏவி தமிழ் மக்களை அழித்தது சிங்களம்.
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக பறைசாற்றிக் கொண்ட சிங்களம், வேறு ஏதாவதொரு காரணத்தைக் காட்டி தமிழ் மக்களை அழிக்க திட்டம் தீட்டியது. இதுவே கிறீஸ் பூதங்கள் என்கிற சிறிலங்காப் படையினரின் சிறப்புப் படையினர்.
ஒன்றும் தெரியாத பாப்பாக்கள்
தமிழீழப் பகுதிகளில் ஏவப்பட்ட இராணுவத் தாக்குதல்களை பல ஆண்டுகளாக கருத்தில் கொள்ளாது செயற்பட்டார்கள் அரச சார்பற்ற நிறுவத்தினர். சிங்கள அரசுகள் தமக்கு எதிராக செயற்பட்டு விடுவார்களோ என்கின்ற அச்சத்தில் அமைதியைக் கடைப்பிடித்தார்கள் பல அரச சார்பற்ற நிறுவனங்கள்.
நான்காம் கட்ட ஈழப்போரின் போது உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் சிங்கள அரச படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினர். இதன் பலனாகவே இன்று உலக நாடுகளினால் வேண்டப்பட்டு வரும் போர் விசாரணை. பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த தொண்டர் நிறுவனங்கள் திறம்பட செயற்பட்டிருந்தால், இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், தமிழர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஒன்றும் தெரியாத பாப்பாக்களாக செயற்பட்டார்கள் தொண்டு நிறுவனங்கள் அன்று. அதைப்போலவேதான், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெண்களுக்கு எதிராக செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வெளிக்கொண்டுவராமல் மௌனம் காக்கிறார்கள் பல உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.
மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உலக மயப்படுத்தினால், சிங்கள காடையர்களுக்கெதிராக பலமான ஒரு சக்தியை உருவாக்க முடியும். இதன் மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தருவதுடன், தமிழர் பிரதேசங்களில் அமைதி வாழ்வை உண்டுபண்ண முடியும். போரின்போது அவலப்பட்ட மக்கள், இப்படியான பயங்கரமான செயற்பாடுகள் மூலமாக உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
மகிந்தா அரசின் செயற்பாடுகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் ஏதோ தமிழ் மக்கள் மீது தான் அன்பு கொண்டுள்ளவர் போல் நாடகமாட முற்பட்டுள்ளார். குறித்த மர்ம மனிதர்களின் அனைத்து விபரங்களையும் ரணில் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவரின் விசுவாசமான இராணுவப் படை அதிகாரிகள் மூலமாகவே அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்துள்ளார் ரணில்.
அப்படியிருக்க, வெறும் கண்துடைப்புக்காக பாராளுமன்றத்தில் குறித்த தாக்குதல் சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். ரணில் பாராளுமன்றத்தில் கூறியதாவது: "மர்ம மனிதர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. யாழ் குடாநாடு முழுவதும் ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோண்டாவில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. அதே தினத்தன்று இரவு 8.30 மணியளவில் திருநெல்வேலி பிரதேசத்தில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையிலும், செப்டெம்பர் 01 ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்."
அவர் மேலும் கூறுகையில், "தற்போது 50,000-ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 20-30 பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே காணப்படுகிறது.
வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும் காணப்படுகிறது. இந்தநிலையில் அத்துமீறல் விடயங்களை தடுப்பதற்கு படையினரால் முடியும். ஆயினும், இது நடைபெறாமையின் மூலம் தெளிவாகும் விடயம் என்னவெனில் இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எதுவித தேவையும் இல்லை என்பதும், அரசாங்கத்திற்கு மர்ம மனிதனின் மர்மம் புரியும் என்பதுமாகும்."
வேலியே பயிரைத் தின்னும் கதை போல, குறித்த கிறீஸ் பூதங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விசேட உயர்மட்டக் செயற்குழு ஒன்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இயங்கும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2006-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டுவரை யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றியவரே மேஜர் ஜெனரல் சந்திரசிறி என்பது குறிப்பிடத்தக்கது. இவரினால் ஒருபோதும் தமிழர்களுக்கு நீதியைப்பெற்றுத் தர முடியாது என்தே உண்மை.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் பகுதிகளில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. படுதோல்வியடைந்தது. இக்குழுவும், சிங்கள அரச படையினருமே வடக்கின் பல பகுதிகளில் சேர்ந்து இயங்குகிறார்கள். இப்படியிருக்க, தேவானந்தா தனக்கு குறித்த கிறீஸ் பூதங்கள் பற்றிய எதுவித தகவலும் தெரியாது போன்ற நாடகத்தை நடத்துகிறார்.
சிங்கள அரசு நியமிக்க இருக்கும் குழுவில் ஈ.பி.டி.பி.யினரும் அங்கம் வகிப்பார்கள் என்று அறியப்படுகிறது. ஆக, சிங்கள அரசு நியமிக்கும் அனைத்து குழுக்களும் வெறும் கண்துடைப்புக்காகவே நியமிக்கபடுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
கிறீஸ் பூதங்களின் நடமாட்டத்தால் பதற்ற சூழல், அமைதியின்மை போன்ற சாதாரண வாழ்வியல் தமிழர் பிரதேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்தும்போது அவர்களுக்கு சிங்களப் படையினர் பாதுகாப்பு வழங்குவதுடன், காவல்துறையினர் மக்களைத் தாக்கி கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று வருவது ஆழ்ந்த வருத்தத்தை தமிழ் மக்களிடையே உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் மீது விரக்தி கொண்டுள்ள எட்டப்பன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் தலைமையில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த மர்ம மனிதர்களின் விவகாரத்தைக் கையாள்வதென்பது வேடிக்கையான விடயமே. ஆட்சியாளர்களே நேரடியாக குறித்த மர்ம மனிதர்களை இயக்கும்போது எப்படி அவர்களுடைய செயற்பாடுகளை நிறுத்த முடியும் என்பதே அனைவருடைய கேள்வியாக உள்ளது.
nithiskumaaran@yahoo.com
அனலை நிதிஸ் ச. குமாரன்
http://smsgalatta.blogspot.com
http://smsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?