தமிழகத்தில் தற்போது ஒரு மென்புரட்சி மௌனமான கட்சி, இன, மத பேதமின்றி அரங்கேறி வருவதற்கான காரணிகளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் உள்ளதை தற்போதைய கள நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு என்று நோக்காமலோ, ராஜீவ் காந்தியின் கொலை என்று நோக்காமலோ ஏன் இந்த மூவரும் தூக்கிலிட்டு அநியாயமாகக் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்துக் களம் ஆழமாக தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ளதாக தமிழகத்தின் மிகவும் பிரபல்யமான நாளிதழ் ஒன்று நாடிபிடித்து அறிந்துள்ளது.
குறிப்பாக சாந்தன் வெளிநாடு செல்வதற்காக தனது குடும்பச் சொத்தான காணியை ஈடு வைத்து சென்னை வந்தவர் என்பதையும், அவர் ஒரு தீவிர இந்துமதப் பற்றாளர் என்பதையும்,
அவர் கைது செய்யப்பட்டு இன்று வரையான 21 வருடங்களாக அவரைப் பார்ப்பதற்கு வருவதற்கு பண வசதியில்லாத அவரின் பெற்றோரால் முடியவில்லை என்பதையும் அண்மையில் ஜூனியர் விகடன் பத்திரிகை மிகவும் உருக்கமான முறையில் வெளிக் கொணர்ந்திருந்தது.
இது இவர்கள் நிரபராதிகள் தான் என்ற கருத்தை அல்லது சிந்தனை மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிராமணர் சமூகத்தின் இக் கொலைத் தண்டனை தொடர்பான பார்வையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒரு தமிழக மூத்த பத்திரிகையாளர், ஒரு வயதான பிராமணர் புத்தகக் கடையொன்றில் "இவாளுக்கும் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தமேயில்லையாமே, அப்படின்னா எதுக்கு இவாளைத் தூக்கிலிடணும்?" என தனது அதிருப்தியை அக் கடையிலிருந்தோருடன் பகிர்ந்தது தமிழகத்திற்கு புதியதொரு விடயம் எனவும் தனக்கே இந்த மாற்றம் ஆச்சரியமானதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு தமிழர்களின் தலைவி என தன்னை செயற்பாடுகளின் மூலம் நிலைநிறுத்தி வரும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கூட மிகவும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்பதையும் இவரது அரசு தற்போதைய வழக்கிற்கு பதில் வழங்கும் காலக்கெடுவை நீட்டி நீதிமன்றத்தின் மூலமே இந்த வழக்கை நியாயமற்றது என்பதை நிரூபிக்க முயலும் என்றும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக தமிழகம் ஜீவகாருண்யம், மனிதாபிமானம் என்பவற்றை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தாமல் இவை தொடர்பான விடயங்களில் உலகோடு ஒத்துச் செயற்படும் நிலைக்கு தன்னை ஒரு மௌனப் புரட்சி மூலம் உயர்த்தியுள்ளது என்றும் மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.
http://smsgalatta.blogspot.com
http://smsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?