ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.
கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த், "நானே முதல்வர்" என்ற அறைக்கூவலுடன் அரசியலுக்கு வந்தார் என்றாலும் கூட, "நாற்பது சட்டமன்ற தொகுதிக்கான சீட்" என்ற தொகுதி உடன்பாட்டுக்குள் வந்தவுடன், "அட போங்கப்பா... மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதி தானா?" என்று நடுநிலை வாக்காளர்கள் சலிப்பு தட்டினார்கள்.
ஆளுங்கட்சிக்கு எதிராக செய்யும் அரசியல் நடத்தி, சீக்கிரம் கால் ஊன்றுதல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்தல் என்ற அரசியல் ஆரம்ப பாடத்தில் தேர்ச்சி பெற்று, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்துக்கு இனி வரும் தேர்தல்கள் நிச்சயம் சத்திய சோதனை தான்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கலைஞர் அரசுக்கு எதிராக அறிக்கை அரசியல் நடத்திய பாமகவின் மருத்துவர் பாணியில், அம்மாவிடம் கேப்டன் "உள்ளிருந்து எதிர்த்தல்" அரசியல் பண்ண முடியாது.
சட்டமன்றத்தில் இவ்வளவு அசுர பலம் கிடைக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு முன்பே தெரிந்திருந்தால், விஜயகாந்துக்கு நாற்பது சீட்டுக்களை ஜெயலலிதா ஒதுக்கி இருக்கமாட்டார், ஏன் கூட்டணியில் கூட சேர்த்திருக்கமாட்டார். விஜயகாந்த் இத்தனை தொகுதியில் ஜெயித்ததை அம்மா, அவ்வளவாக ரசித்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.
தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது விஜயகாந்துக்கு இப்போதைய சூழ்நிலையில் கஷ்டம் தான்.
இன்னும் ஆட்சிக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்களோ, முணுமுணுப்புகளோ, பெரிய அளவில் கிளம்பாத நிலையில்,
ஜெயலலிதாவை எதிர்த்தால், தேமுதிகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இதே அளவு அடையாளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
சமச்சீர் கல்வி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அரசுக்கு, எதிர்ப்பு காட்டிய போது, விஜயகாந்த் எதிர்க்க துணியவில்லை என்பது தான் உண்மை. குதிரை கிடைக்கும் வரை கழுதை என்று சப்பைக்கட்டு தான் கட்ட முடிந்தது.(இப்போது கழுதை தான் என்று முடிவாகிவிட்டபின், குதிரை தேடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, அம்மா சொன்னால் கழுதை தான் இந்த கள்ளழகரின் குதிரை போல)
அதிமுக போலவே தேமுதிகவும் கிராமப்புறங்களில் அதிக வாக்கு வங்கியைக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இது முக்கியமாக "கவர்ச்சியை அடிப்படியாகக் கொண்ட வாக்கு வங்கி". எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் என்ற பிம்பங்களுக்காக மட்டும் வாக்களிப்பவர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கிறார்கள்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை. விஜயகாந்துக்கு கட்சியை நடத்தும் அளவுக்கு அந்த கவர்ச்சி உதவியிருக்கிறது அவ்வளவே.
இலவசங்களை காட்டி இந்த ஓட்டு வங்கியை தன் பக்கம் திருப்ப திமுக போட்ட திட்டங்கள் அரசியல் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால்.., சினிமாவை அடிப்படையாக கொண்ட, வெள்ளந்தி மனிதர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதில் உண்மையில், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தான் போட்டி.
கிராமப்புறங்களில் தேமுதிக வேர் ஊன்றி விட்டால், தமிழக அரசியலில் விஜயகாந்த், தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிடுவார் என்பது ஜெயலலிதா தெரியாமல் இல்லை.
ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.
டிஸ்கி:
ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சரத்குமார், கிருஷ்ணசாமி, ஜாவஹிருல்லா என பெரும் கூட்டமே காத்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதேனும் ஒரு நாளின் சட்டமன்ற நிகழ்வை ஜெயா டிவியில் பாருங்களேன்)
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?