புதுடில்லி : பெங்களூரு பஸ்சில் தீ விபத்து, அசாமில் பயணிகள் ரயில் ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானது என ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள விபத்துக்கள் பஸ் பயணம், ரயில் பயணம் என எதிலும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. பெங்களூரு விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அசாம் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு பஸ்சில் தீ :
கர்நாடகாவின் தாவன்கிரி பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு ஏசி பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதில் 6 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பஸ்சில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடிய டிரைவர் தலைமறைவாகி உள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் 3வது பஸ் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஏசி பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். அதற்கு முன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு சென்ற வால்வோ பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர்.
ஏரியில் மூழ்கிய ரயில் :
அசாமின் மொரிகான் மாவட்டத்தில் அஜூரி ஸ்டேஷனுக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் அருகில் இருந்த ஏரிக்குள் மூழ்கியது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் 3 பெட்டிகள் ஏரிக்குள் மூழ்கியது. இதில் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏரிக்குள் மூழ்கிய 3 பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து பற்றி விபரங்கள் அறிந்து கொள்வதற்காக திமாபூர், லம்டிங் மற்றும் கவுகாத்தியில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயமணிகளுக்கு பாதுகாப்பில்லையா? :
ஒரே நாளில் பஸ்சிலும், ரயிலிலும் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. ஏசி பஸ்களில் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதும், ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. இருப்பினும், இத்தகைய விபத்துக்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ரயில்வே நிர்வாகமோ, சாலை போக்குவரத்து கழக நிர்வாகமும் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுத்தபாடில்லை. பாதுகாப்பில்லாத, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அபாயகரமாக பயணத்தையே மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை விபத்துக்கள் ஏற்பட்டாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் போக்குவரத்து நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவரிடமும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?