Img சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர் சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Union Minister KV Thomas condemns Saradhpawar
புதுடெல்லி, பிப்.13-
கடந்த 2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த இலாகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் ராஜாங்க மந்திரி ஆனார். அதன்பிறகு 2011-ம் ஆண்டு கே.வி.தாமஸ் உணவு இலாகாவுக்கு தனிப்பொறுப்புடன் மந்திரி ஆனார். சரத்பவார் விவசாய இலாகாவை கவனித்து வருகிறார்.
அப்போது முதலே உணவு சட்டம், சர்க்கரை பற்றிய கொள்கைகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கச்சா சர்க்கரைக்கு மானியம் வழங்குவது தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3 தடவை நடந்த மந்திரிசபை கூட்டங்களில் அந்த பிரச்சினையில் முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், உணவு மந்திரி கே.வி.தாமஸ் 110 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், முதுகில் விழுந்த குத்து என்ற பெயரில் ஓர் அத்தியாயம் இடம்பெற்று உள்ளது. 5 பக்கங்கள் கொண்ட அந்த அத்தியாயத்தில் அவர் விவசாய மந்திரி சரத்பவாரை கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார்.
அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 1999-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் சரத்பவார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பி.ஏ.சங்மா தான் முதன் முதலில் இந்த பிரச்சினையை கிளப்பினார். பின்னர் சங்மா இந்த பிரச்சினையை கைவிட்ட போதிலும் சரத்பவார் அதை பிடித்துக்கொண்டார்.
கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதற்கு வலுவூட்டியவர் என்று சோனியா காந்தியை சரத்பவார் புகழ்ந்த போதிலும், அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்று மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியால் முறியடிக்க முடியாது என்றும் கூறினார். அந்த பிரச்சினையை பெரிதாக்கி சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் சரத்பவார்.
அவர்கள் அவ்வாறு பேசியது குறித்து சோனியா காந்தி மிகுந்த வருத்தம் அடைந்தார். பின்னர் சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்கள்.
சரத்பவார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவருக்கும், சோனியா காந்திக்கும் சுமுகமான உறவு இருந்தது இல்லை. சரத்பவார் திறமையானவர் என்ற போதிலும் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்ற ராஜீவ் காந்தியின் கருத்தை மனதில் கொண்டு அவரிடம் இருந்து சோனியா காந்தி சற்று விலகியே இருந்தார்.
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் 2-வது நிலையில் இருந்த அர்ஜூன் சிங் வகித்த இடத்தின் மீது சரத்பவார் கண் வைத்து இருந்தார். 13-வது பாராளுமன்ற தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமர் ஆகிவிட்டால், பிரதமராகும் தனது கனவு ஒருபோதும் பலிக்காது என்ற எண்ணம் சரத்பவாருக்கு இருந்தது.
சோனியா காந்திக்கு எதிராக பேசியவர்களில் சிலர் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரசுக்கு கடிதம் எழுதிய போது, சோனியா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அந்த கடிதங்களுக்கு அர்ஜூன் சிங்தான் பதில் எழுதினார்.
இவ்வாறு அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது.
இந்த புத்தகம் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியானது. அதன்பிறகு கூடுதலாக சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு அதன் ஆங்கில பதிப்பு வெளியாகி உள்ளது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?