தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone
ராமநாதபுரம், அக்.29–
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–
பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் வெப் காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?