ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government
புதுடெல்லி, அக். 30-
நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் தலையெழுத்தையே வெங்காய விலையுயர்வு மாற்றி அமைத்து விடுமோ? என்ற அச்சம் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆட்கொண்டுள்ளது.
டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் டெல்லிக்கு வரவேண்டிய வெங்காய லாரிகளை மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தி விடுவதாக கூட ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற நாசிக்கில் இருந்து டெல்லி அரசு சார்பில் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய ஷீலா தீட்சித் முடிவு செய்தார்.
தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசின் புதிய முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் அவர் அனுமதி கோரினார். சரக்கு பற்றாக்குறையை போக்கவே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சந்தை விலைக்கே டெல்லியில் விற்கப்படும். அரசியல் ஆதாயத்துக்காக சலுகை விலையில் மக்களுக்கு விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வாக்குறுதியை ஏற்று டெல்லி அரசே நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. இதனையடுத்து, நாசிக்கில் உள்ள லசல்கான் வெய்காய சந்தைக்கு டெல்லி அரசு அதிகாரிகள் சென்றனர்.
இதனையடுத்து, நாளொன்றுக்கு 9000 டன் வெங்காயம் பயன்படுத்தப்படும் டெல்லிக்கு இன்று மட்டும 2 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேர்ந்தது.
டெல்லி வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80-90க்கு விற்கப்படும் நிலையில் அரசின் சார்பில் 125 வேன்களின் மூலம் நேற்று வெங்காய விற்பனை தொடங்கியது.
டெல்லியின் 500 பகுதிகளை சுற்றி வந்த இந்த வேன்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தன.
ஆயினும், இன்று தெருத் தெருவாக கூவி விற்கப்பட்ட இந்த வெங்காயம் சமைப்பதற்கு தகுதியற்று அழுகிப் போய் உள்ளதாக கூறும் சில பெண்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் இது தேவை இல்லை என்று ஒதுக்கிவிட்டு அதிக விலை கொடுத்தாவது நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
டெல்லி மால்வியா நகரை சேர்ந்த குடும்பத் தலைவி ரேகா டண்டன் என்பவர் கூறுகையில் மலிவாக கிடைக்கிறது என்று நூறு ரூபாய் கொடுத்து 2 கிலோ வெங்காயம் வாங்கினேன்.
அதில் 1 கிலோ அழுகல் வெங்காயமாக உள்ளது. இதை விட 80 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வெளி மார்க்கெட்டில் வாங்கியிருந்தால் எனக்கு 20 ரூபாய் மிச்சமாகியிருக்கும் என்று கூறினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த டெல்லி அரசு அதிகாரிகள், வெங்காய லாரிகள் மழைபெய்த மாநிலங்கள் வழியாக வந்ததால் சற்று தரமற்றவை ஆகிப்போய் இருக்கக்கூடும் என்றனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?