சேலத்தில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி heavy rain in Salem house wall collapse 3 death
Tamil NewsToday,
சேலம், அக்.9–
சேலத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:–
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள வடக்கு பொன்னம்மாப்பேட்டை ஏரிக்கரை ரோட்டில் ராமமூர்த்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). தறித்தொழிலாளி. பீடா கடையும் வைத்துள்ளார்.
இவரது 2–வது மனைவி கல்யாணி (வயது 40). முதல் மனைவி தனியே கோவையில் வசித்து வருகிறார். சீனிவாசனும், அவரது மனைவியும் வீட்டில் தறி நெய்தும் வந்தனர்.
நேற்று இரவு சீனிவாசன் மனைவி கல்யாணி, மகள் ஜானகி (வயது 22), பேத்திகள் நந்தினி (வயது 8), திவ்யா (வயது 10), பேரன் சஞ்சய் (வயது 8) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று இரவு பெய்த பலத்த மழையால் வீட்டு சுவர் நனைந்து பொதும்பிபோய் இருந்தது.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினார்கள்.
இதை கேட்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து அனைவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி சேலம் அம்மாப்பேட்டை போலீசுக்கும், செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கோட்ட தீயணைப்பு அதிகாரி எழில் அரசு, உதவி கோட்ட அதிகாரி முருகேசன், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு அதிகாரி வெங்கடாசலம் மற்றும் வீரர்கள் உடனே சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சீனிவாசன், மகள் ஜானகி, பேத்தி நந்தினி ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.
கல்யாணி, திவ்யா, சஞ்சய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களை தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றி உடனே சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் வசித்து வந்த வீடு ஓட்டு வீடாகும். இந்த பகுதி தாழ்வான பகுதி ஆகும். சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும். நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் சீனிவாசனின் வீட்டு சுவர் ஈரம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாபு, உதவி கமிஷனர்கள் ரவிசங்கர், சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் சூரியமூர்த்தி, ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?