Tuesday, 16 July 2013

எங்கள் உயிருக்கு ஆபத்து : கலப்பு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் செந்தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு
கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும், உடையார்பாளையம் தென்கச்சி பெருமாள்நத்தம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் விமல்ராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம்.
எங்களது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் வீட்டைவிட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்றுவிட்டேன். அவர் என்னை கடந்த மாதம் 25ந்தேதி பதிவுத்திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நானும், என் கணவர் விமல்ராஜும் திருப்பனந்தாள் வடக்குத்தெருவில் வசித்து வருகிறோம்.
இந்த நிலையில் என்னை விமல்ராஜ் கடத்தி சென்று விட்டதாகக்கூறி என் தந்தை ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டுதான் விமல்ராஜுடன் வந்து அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கும் என் சமூகத்தை சேர்ந்தவர்களும், கட்சி பிரமுகர்களும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எங்களை பிரிக்க பார்க்கிறார்கள். எனவேதான் நாங்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுக்க வந்தோம்.
இவ்வாறு செந்தமிழ்ச்செல்வி கூறினார்.
மேலும் செந்தமிழ்ச்செல்வி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கும், எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து கோர்ட்டும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. நான் மைனர் என்றும், என்னை எனது கணவர் கடத்தி சென்று விட்டதாகவும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணைக்காக அழைத்தால், நாங்கள் விசாரணைக்காக செல்லும் வழியிலோ அல்லது விசாரணை முடித்து விட்டு திரும்பும் போதோ எங்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.
மேலும் பொய் புகார் அடிப்படையில் எனது மாமனார், மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்த நிலையில் நானும், எனது கணவரும் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட திருப்பனந்தாள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வசித்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கியும், நாங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டி இருப்பின் அதனை தாங்கள் உத்தரவுப்படி தங்கள் அதிகார வரம்பில் உள்ள போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிட உத்திரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
பேட்டியின் போது அவரது காதல் கணவர் விமல்ராஜ், வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger