ஊர் உலகமெல்லாம் கொல வெறி பாடல் புராணம்தான். இந்தப் பாடலைப் பாடியதற்காக தனுஷுக்கு அம்பானி வீட்டில் விருந்து, டாடா வீட்டில் தட புடல் உபச்சாரம், பிரதமர் வீட்டில் பிரமாத மரியாதை... தனுஷும் சந்தோஷத்தின் உச்சிக்கே போய் விட்டார்.
இன்னொரு பக்கம், இந்த கொலவெறி பாடலைக் கேட்கும் சாதாரண, நடு வயதுக்காரர்கள் அல்லது இனிமையான சினிமா இசை ரசிகர்கள் 'பிபி' ஏறி வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்ததும் நடந்தது.
இந்த இரண்டாவது சம்பவம்தான் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் 'கொலவெறிப்' பாடலைப் பாடி ரயிலில் பயணிகளைத் 'துன்புறுத்திய' நான்கு பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டையில் குடிபோதையில் ரயிலில் ஏறிய இந்த நால்வரும் சமீபத்திய ஹிட் பாடலான 'ஒய் திஸ் கொலவெறி டி..' பாடலை பாடி பெண்களை கேலி செய்துள்ளனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் விவரம்: செங்குன்றத்தைச் சேர்ந்த கணேசன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், சேஷப்பா, பாபு என விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 பேரும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் ஏறி கோரஸாக கொலவெறி பாடலைப் பாடியுள்ளனர். அதில் ஒருவர் லுங்கி அணிந்துகொண்டு தனுஷைப் போல நடனமாடி சக பயணிகளை தொந்தரவு செய்ததாக என போலீசார் தெரிவித்தனர்.
மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வந்தபோது கூச்சலைக் கேட்டு ரயில்வே போலீசார் பெட்டிக்குள் ஏறினர். அப்போது அமைதியாகிவிட்டிருந்தனர் இளைஞர்கள். பின்னர் ரயில் புறப்பட்டபோது மீண்டும் பாடத் தொடங்கினர். அப்போது போலீசார் அவர்களைப் பிடித்து கைது செய்தனர். தனுஷின் கொலவெறி பாடலை மகா வெறியோடு பாடி ஆடி தொல்லை கொடுத்த அந்த நால்வரும், தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?