இந்தியகிரிக்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்ப்புகளுக்கும் அதனாலே ஏமாற்றங்கள் கண்டனங்கள்விமர்சனங்களுக்கு உள்ளான சமகால வீரர் யுவ்ராஜ் தான். இன்று ரெய்னா, ரோஹித் ஷர்மா,மனோஜ் திவாரி, கோலி, சுவரப் திவாரி, மனிஷ் திவாரி என இந்திய கிரிக்கெட்டின்எதிர்கால பட்டியலில் நிறைந்துள்ள ஆர்ப்பாட்டமான அதிரடி ஆட்டமும், மீடியா தளுக்கும்மிக்க இளைய வீரர்களுக்கு ஒரு முன்னோடி அவர் தான். யுவ்ராஜுக்கு முந்தின தலைமுறைஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஒற்றைபட்டையான திறன்கள் மற்றும் திட்டமிடல்சுயகட்டுப்பாடு ஆகிய விழுமியங்களை பிரதானப்படுத்தியது. சச்சின், கங்குலி, திராவிட்ஆகியோர் நிலைத்து ஆடுவதை, குறைவாக ஆபத்துகளை எதிர்கொள்வதில், வளமான சராசரியை தக்கவைப்பதில் கவனம் மிக்கவர்கள். அவர்களின் காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் கல்லும்முள்ளும் நிறைந்த மலையேற்றம் எனலாம். அவர்கள் அணியின் வீழ்ச்சிக்கு சரிவுக்குஎப்போதும் தயாராக இருந்தார்கள். மோசமாக தோற்காமல் இருப்பதே பிரதானம். பிறகு மெல்லமெல்ல எதிரணிக்கு சமமாக போட்டியிட தமது அணிக்கு உதவினர். ஆனால் யுவ்ராஜின் தலைமுறைபின்வாங்குதலை, தற்பாதுகாப்பை, சுதாரிப்பை அறியாதது. யாரையும் அஞ்ச வேண்டியதில்லை,எதற்கும் தயங்க வேண்டியதில்லை என அவர்கள் முழங்கினர். தனித்தே தம்மால் வெற்றியைவாங்கித் தந்து படக்கருவிகளின் பிளாஷுக்கு முன்னால் பளிச் புன்னகை செய்து பேட்டிதருவதே சாதனை என்று கருதினர். ஓட்ட சராசரி அளவுக்கு மீடியாவில் கிடைக்கும் நல்லபெயரும் பிரபலமும் முக்கியம் என்று அறிந்தனர். கிரிக்கெட் வீரர் கிரிக்கெட்மட்டும் ஆடுபவன் அல்ல, அவன் விளம்பர நாயகன், அபிப்ராயங்களை சதா முழங்குபவன்,கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொடர்ந்து சவால்களை விடுப்பவன், யாரும் கவனிக்காமல்இருந்தாலும் யாரையாவது பரிகசித்து அவமானித்து கண்டித்து கவனத்தை பெறுபவன் என்றுநிலைப்பாடு உருவானது. இப்படியான பரிணாமத்துக்கு 2000இல் ஐ.சி.சி நாக் அவுட் கோப்பைதொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவ்ராஜ் தனது இரண்டாவது ஆட்டத்தில் அடித்த 84ஒரு நல்ல உதாரணம்.
சச்சின் அதுவரை சதம்அடித்து மட்டும் தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுத்துவார். ஆனால்யுவ்ராஜ் இதெல்லாம் போதாது என்று நிரூபித்தார். ஒரு நவீன கிரிக்கெட் வீரன்வெற்றிக்காக காத்திருப்பதில்லை; யுவ்ராஜ் தானாகவே அதிக ஓட்டங்கள் அடித்து அன்றுஅணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்தினார். அப்போதும் அணி மெல்ல சரிந்து வந்த போதுவெறுமனே நகம் கடித்து "இதற்கு மேல் ஒன்றும் இல்லை" என்று கல்லியில் நின்று யோசிக்காமல் பாய்ந்து வந்துஒரு காட்ச் பிடித்தார். இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் நமது வீரர் ஒருவர்இவ்வளவு வேகமாக எளிதாக சரளமாக மைதானத்தில் காற்றில் பறந்ததில்லை. அப்போதும்இந்தியா மீண்டும் துவண்டு வந்த போது நன்றாக ஆடி வந்த பெவனை ரன் அவுட் செய்தார்.. இனிமேலும்ஒன்றும் இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த ஆட்டத்தை வெல்ல நேர்ந்தது. பின்னர்நடந்த ஆட்டங்களிலும் பந்துவீச்சாளராக யுவ்ராஜ் பல முக்கிய விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஸ்டீவ் வாஹை போல யுவ்ராஜை ஆட்டத்தில் இருந்து ஓய்வாக வைக்கவேமுடியாது. இப்படி தன்னை யுவ்ராஜ் வலுவாக அறிவித்த போதும் சரி பின்னரும் சரி ஒருமேலான மட்டையாளராக அல்லது அனைவரும் அங்கீகரிக்கக் கூடிய ஒரு கிரிக்கெட்டராக அவர்உயரவே இல்லை. ஆனால் அவர் வெற்றி நாயகனாக இருந்தார். சச்சினுக்கு மாறாக யுவ்ராஜ்நன்றாக ஆடிய போதெல்லாம் இந்தியா வென்றது. 2006இல் மே.இ தீவுகளில் யுவ்ராஜ் 90அடித்து அணிக்கு வெற்றி பெற ஒரு ஓட்டம் தேவையிருந்த நிலையில் அவர் ஆட்டமிழக்க நடந்தஇரண்டாவது ஒருநாள் ஆட்டம் மட்டுமே விதிவிலக்கு. ஒரு நல்ல கிரிக்கெட்டர் தரமானவராகஉலக அங்கீகாரம் பெற்றவராக வலுவான தொழில்நுட்பமும் பொறுமையும் கொண்டவராக தன்பொறுப்பை நன்றாக உணர்ந்து ஆடக் கூடியவராக இருக்க வேண்டும் என்று பிம்பம் யுவ்ராஜின்வருகையுடன் உடைந்தது. இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு பின் தோன்றியர்கள்அனைத்தையும் செய்பவர்களாக தாம் ஆடினால் அணி தானே வெல்லும் எனும் மிகையானதன்னம்பிக்கை கொண்டவர்களாக பேச்சு, கேளிக்கை, புகழ்வேட்டை, பந்தைத் துரத்துவதற்குசமானமாய் பணத்தையும் துரத்துவதே சாமர்த்தியம் என்று நம்புபவர்களாக ஆனார்கள்.
சச்சின் வாழ்நாளெல்லாம்தன்னை ஒரு குறையற்ற முழுமையான மட்டையாளராக மெருகேற்றுவதற்கே செலவழித்தார். ஒருபாறை சிற்பமாவது போல் அவர் மெல்ல மெல்ல தன்னையே வேறொன்றாக மாற்றினார். கடந்தமுப்பது வருடங்களில் சச்சின் அளவுக்கு தன்னை தொழில்நுட்ப ரீதியாகவும் ஷாட்களின்தேர்வு, ஆட்டவேகம் ஆகிய விசயங்களிலும் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ள வேறொருமட்டையாளர் இல்லை எனலாம். உதாரணமாக லாராவும் ரிச்சர்ட்ஸும் கடைசி ஆட்டம் வரை தாம் வாழ்வில்முதலில் மட்டையை ஏந்திய போது இருந்த அதே திறந்த மனதுடன் தான் ஆடினர். ஆனால் சச்சின்மெல்ல மெல்ல இயல்பை மாற்றிக் கொண்டே வந்தார். அதனாலே அவரது ஆவேசமான ரசிகர்களும்கூட அவரை முப்பது வயதுக்கு மேல் வெறுக்கவும் கண்டிக்கவும் தொடங்கினர். சச்சின்அதற்கு பதிலாக ஓட்டங்களை குவிக்கும் சாதனைகளை ஒரு கண்மூடித்தனமான மூர்க்கத்துடன்செய்ய துவங்கினார். ஆடத் துவங்கிய போது கிரிக்கெட் அவருக்கு ஒரு சாகசம், சவால்,சுயவெளிப்பாடு என்றால் கடந்த பத்து வருடங்களில் அது ஒரு கச்சிதமாக, தவறின்றி செய்துபுரோகிரஸ் கார்டில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டிய வேலை போல ஆகி விட்டது. யுவ்ராஜ்முதன்முதலில் சச்சின் அதுவரை எதெற்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கினாரோ அதெல்லாம்நவீன கிரிக்கெட்டில் இனி செல்லாது என்று நிறுவினார். கடந்த வருடம் ஒரு பேட்டியில்சச்சினை அணியில் "தாத்தா" என்று செல்லப்பெயரில் அழைப்பதாக யுவ்ராஜ சின்னநக்கலுடன் கூறினார் (சச்சின் பதிலுக்கு சற்று கோபப்பட்டார்). குறியீட்டுரீதியாகவும் அது உண்மை தான்.
மிக சுதந்திரமாகநேர்மையாக உந்துதல் படி ஆடத் துவங்கின யுவ்ராஜின் ஆட்டத்தில் அந்த தடையின்மையைதான் ஒவ்வொருவரும் ரசித்தனர். அவர் தலைமுறையில் அந்தளவுக்கு இயல்பான வேறு ஒருதிறமை தோன்றாததால் மீண்டும் மீண்டும் அவரை வியந்தனர். யுவ்ராஜுடன் அறிமுகமானகாயிப் இந்த வியப்புக்கு மறைமுகமாக ஒருவிதத்தில் பயன்பட்டார். சச்சின் திராவிட்போல் இந்த முரண்பட்ட ஜோடி இரண்டு விதமான இயல்புகளை அதன் விளைவுகளை நமக்குகாட்டியது. ஒருவர் மிகுதியான திறனும் ஆனால் குறைவான சுயகட்டுப்பாடும் கொண்டவர்.மற்றவர் நேர்மாறானவர். காயிப்பின் இயல்பு நவீன கிரிக்கெட்டில் காலாவதியான ஒன்று.கவனம் என்றால் என்னவென்றே மறந்து போன ஒரு யுகம் இது. யுவ்ராஜ் காலத்தின் நாயகனாகபெரும் எழுச்சியை அடைந்தார். காயிப் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட சராசரி மொஜும்தர்களுக்கும்ஜேக்கப் மார்டின்களுக்கும் இடையே காணாமல் போனார். யுவ்ராஜ் சமகாலத்தின் சிறந்தஒருநாள் மட்டையாளராக பரவலாக பாராட்டப்பட்டார். சச்சினை விட சேவாகுக்கு அடுத்தபடியாய் யுவ்ராஜை அணிகள் அதிகம் அஞ்சத் தொடங்கின. அவரது பந்துவீச்சு நன்றாகமெருகேறி ஆல்ரவுன்டர் ஸ்தானத்துக்கு நகர்ந்தார். அவ்வளவு பெரிய உயரத்தை மிகசீக்கிரமாகவே எட்டி விடுவது ஒரு துர்பாக்கியமே. மெல்ல மெல்ல இறங்குமுகம்துவங்கியது. அதன் முதல் அறிகுறியாக யுவ்ராஜ் தனது டெஸ்ட் ஆட்டம் பற்றிவிமர்சகர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை சீரியசாக எடுத்துக் கொண்டார். இந்தஎதிர்பார்ப்புகளின் நெருக்கடியில் அவர் பதற்றமானவராக இயல்பற்றவராக மாறினார்.
யுவ்ராஜின் இளமைப்பருவம் இப்படியான எதிர்பார்ப்புகளின் கடும் நெருக்கடியில் தான் கழிந்தது எனலாம்.அவர் கிரிக்கெட்டை விரும்பி ஏற்றவர் அல்ல. அவரது தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முன்னாள்வேகப்பந்து வீச்சாளர். கபில்தேவின் சமகாலத்தவர். நண்பர். இரண்டொரு ஆட்டங்கள் ஆடிவிட்டு விலகியவர். அவர் தனது தனிப்பட்ட தோல்விக்கு பரிகாரமாக மகனை கிரிக்கெட்டில்வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். யுவ்ராஜுக்கு ஸ்கேட்டிங்கில் அபார ஆர்வம்இருந்தது. அதில் சேம்பியனாகி பல கோப்பைகள் வென்றார். ஆனால் இந்த கோப்பைகளை அப்பாஎளிதில் உதாசீனப்படுத்தி யுவ்ராஜின் ஆர்வத்தை திருப்ப முயல்வார். இது அவரைகடுமையாக காயப்படுத்தி இருக்கிறது. சிறுவயதில் அம்மா குடும்பத்தில் இருந்துபிரிந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு வேறு எந்த ஆதரவும் இருந்திருக்கவில்லை.அப்போது நடந்த ஒரு சம்பவத்தை யுவ்ராஜ் தனது ஆரம்ப கால பேட்டிகளில் ஒன்றில் நினைவுகூர்கிறார். குடும்ப நண்பரான நவ்ஜோத் சிங் சித்து வீட்டுக்கு வருகிறார். அப்பாஅவரிடம் யுவ்ராஜின் ஸ்கேட்டிங் ஆர்வம் பற்றி புகார் சொல்லி மகனை அறிவுறுத்தும் படிகேட்கிறார். சித்து யுவ்ராஜிடம் இப்படி அறிவுரை சொல்கிறார் "ஸ்கேட்டிங் பெண்களுக்கானது.கிரிக்கெட் தான் ஆண்களின் வீர ஆட்டம். நீ கிரிகெட்டுக்கு வா". மெல்ல மெல்ல யுவ்ராஜ் அப்பாவுக்காக கிரிக்கெட்டில்ஆர்வம் செலுத்தி அதில் தனக்கு அபார திறன் உள்ளதை அறிகிறார். 2000இல் இலங்கையில்நடந்த 19 வயதுக்கு கீழானவருக்கான உலகக் கோப்பை தொடர் ஒரு திருப்பம். அப்போதுஅணித்தலைவராக கேயிப்பும் முக்கிய மட்டையாளராக யுவ்ராஜும் இருந்தார். இறுதிஆட்டத்தில் யுவ்ராஜின் 70 சொச்சம் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்தது. அப்போதுகேயிப் தான் எதிர்கால நட்சத்திரமாக பெரிதும் பேசப்பட்டவர். ஆனால் யுவ்ராக் அவரைமுந்தினார். பெட்டிங் சர்ச்சை காரணமாக சீனியர்கள் விலக்கப்பட கங்குலிக்கு கீழான புதுஇந்திய அணியில் கீழ்மத்திய வரிசையில் இடம் பெற்றார். பின்னர் வந்த புகழும் பணமும்யுவ்ராஜை கிரிக்கெட்டை தனது மார்க்கமாக தேர்வு செய்ய தூண்டியது.
ஆனால் எந்தகலைஞனுக்கும் தனது மார்க்கம் அவனது ஒரே முன்னோக்கிய வழியாக இருக்க கூடாது. பின்னர்தன்னலமும் செயற்கையான பிரயத்தனமும் அவனது இயல்பான திறமைக்கு அதன் களங்கமின்மைக்குஊறாகும். கிரிக்கெட்டை தான் கொண்டாடும் ஒரு கலை வடிவமாக மட்டும் பார்த்தனாலேயேலாரா சச்சினை விட மேலானவராக பலராலும் கருதப்படுகிறார். யுவ்ராஜ் பாதி லாராவில்இருந்து பாதி சச்சினாக மெல்ல மெல்ல மாறினார். யுவ்ராஜ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான்மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக துணைக்கண்டத்தில் அணியை காப்பாற்றும் சிறப்பான சதங்கள்அடித்திருந்தாலும் மிக மரபான டெஸ்ட் வடிவம் அவருக்கு வரலாற்று படத்துக்காக நாவைசுழற்றி காவிய வசனம் பேச வற்புறுத்தப்படும் நவீன நடிகனின் சங்கடத்தையே அளித்தது.டெஸ்டில் சிறக்க அவர் விரும்பியதற்கு காரணம் அதற்கான தொழில்நுட்பமும் பிறபண்புகளும் அவருக்கு இருந்ததனால் அல்ல. தன்னால் டெஸ்ட் ஆட முடியாது என்று யாரும்சொல்லக் கூடாது என்பதற்காக அல்லது டெஸ்ட் வடிவை ஆகச்சிறந்த உரைகல்லாக காணும் பலமூத்த கிரிக்கெட் பண்டிதர்களின் ஆமோதிப்புக்காக இருக்கலாம். மைக்கெல் பெவன், அஜய்ஜடேஜா, ஹெர்ஷல் கிப்ஸ் போன்று ஒருநாள் வடிவில் அசாத்தியமான திறமை இருந்தும் சிலகாரணங்களுக்காக டெஸ்டில் நிலைக்க முடியாத சில கிளாஸிக் உதாரணங்கள் ஏற்கனவே உண்டு. நேர்மாறாகமைக்கெல் கிளார்க், திராவிட், லெக்ஷ்மண், மைக்கெல் வான் என டெஸ்டில் உயர்ந்துஒருநாள் ஆட்டங்களில் முற்றிலும் பொருந்தாமல் போனவர்களின் நீண்ட பட்டியலும் உண்டு. இந்தியர்கள்பொதுவாக மரபானவர்கள் என்பதால் யுவ்ராஜின் டெஸ்ட் சறுக்கல்கள் கடுமையாகவிமர்சிக்கப்பட்டன.
இவ்விசயத்தில் அவருக்கானநியாயங்களும் இருந்தன. அவருக்கு நிரந்தரமான வாய்ப்புகள் டெஸ்ட் அணியில்கிடைக்கவில்லை. அவரது மட்டையாட்டத்தின் மிக உச்சமான காலகட்டத்தில் அவருக்குஅநேகமாக வாய்ப்பே இருக்கவில்லை. முப்பதை எட்டி மெல்ல திறன்கள் மழுங்க துவங்கும்போது உடல்தகுதி தொய்வடையும் போது டெஸ்ட் பாத்திரம் அவர் மீது திணிக்கப்பட்டது.பின்னர் அவர் அடிக்கடி காயமுற்றதும் அவரது முன்னேற்றத்துக்கு உதவவில்லை.
யுவ்ராஜின்பிரச்சனையை மேலும் கூர்மையாக புரிந்து கொள்ள அவரை சேவாகுடன் ஒப்பிடலாம். சேவாக்யுவ்ராஜை விட நல்ல பின்கால் ஆட்டக்காரர் மற்றும் உடல் சமநிலை கொண்டவர். அவர் எந்தஒரு குறிப்பிட்ட ஷாட்டுக்காகவும் முன்கூட்டி தயார்ப்படுத்திக் கொண்டு நிற்பதில்லை.இதனால் யுவ்ராஜை போல் எதிர்பாராமல் திசைமாறும் பந்துக்கு தடுமாறி சுதாரித்துமென்மையான முறையில் அவர் ஆட்டம் இழப்பதில்லை. சந்திக்கும் புள்ளியில் இருந்துபந்தை எங்கே போக வேண்டும் என்பதை சேவாகுக்கு அவரது மட்டை தான் தீர்மானிக்கிறது. அதுவரைஅவர் எந்த திசைமாற்றத்துக்கும் தயாரான ஒரு நிலையில் தன்னை நிறுத்திக் கொள்கிறார். சேவாக்அடிக்கும் பந்தை ஸ்லிப் அல்லது லாங் ஆனில் தான் பிடிக்கலாம். யுவ்ராஜ் தனதுமேற்சொன்ன குறைகளால் தொடர்ந்து உள்வட்டத்துக்குள்ளேயே காட்ச் கொடுத்து வெளியேறுவார்.மேலும் சில குறிப்பிட்ட நீளங்களில் வீசி யுவ்ராஜை கட்டுப்படுத்துவது போல் சேவாகைமுடியாது. குறைந்தது துணைக்கண்ட ஆடுதளங்களில் ஏனும். மேலும் ஒரு துவக்கமட்டையாளராக அப்போதைய அணித்தலைவர் கங்குலி சேவாகுக்கு கொடுத்த பொறுப்பு விரைவாகஓட்டங்கள் எடுத்து எதிரணியை பின்வாங்க வைப்பதே. அவர் முப்பதோ நாற்பதோ எடுத்தாலும்பூஜ்யத்தில் வெளியேறினாலும் ஏற்பே. சதம் அடித்தால் அது உபரி எண்களாக கருதப்பட்டன.சேவாகை பற்றி பேசும் போது யாரும் அவர் அடிக்கும் ஓட்டங்களின் எண்ணிக்கை பற்றிகவலைப்படுவதில்லை. அவர் ஏற்படுத்தும் பாதிப்பு, ஓட்டங்களின் வேகத்தில், எதிரணியின்பந்து வீச்சு அளவுகளில் அவர் செய்யும் மாற்றம், உளவியல் ரீதியாய் ஏற்படுத்தும்பின்னடைவு ஆகியவை தான் முக்கியம். இது "சேவாக் விளைவு" எனப்பட்டது. எதிரணியை நிலைகுலைப்பவர் என்னும் எளியஎதிர்பார்ப்பை மீறி சேவாக் பல டெஸ்ட் சதங்களை உலகெங்கும் அடித்தார். இரு முறைமுன்னூறுக்கு மேல் அடித்தார். சேவாகை அவரது முதல் ஆட்டத்தில் கவனித்த ஆடம்கில்கிறிஸ்ட் தனது பத்திரிகை பத்தி ஒன்றில் "இவர் உலகின் சிறந்த ஒருநாள்மட்டையாளராக வருவார்" என்று கணித்தார். ஆனால் நடந்ததோ நேர்மாறாக. சிறந்தடெஸ்ட் வீரராகவும் சுமாரான ஒருநாள் வீரராகவும் ஆனார். மேலும் சேவாகுக்கு ஒருதலைசிறந்த டெஸ்ட் மட்டையாளனாக வரும் ரகசிய விருப்பம் இருந்துள்ளது. சச்சினை தனதுவழிகாட்டியாக அவர் கருதி தீவிரமாக அவரது அறிவுரைகளை, குறிப்பாக நிலைத்து ஆடுவது,பின்பற்றி வந்துள்ளார். யுவ்ராஜிடம் சேவாகின் மேற்சொன்ன திறன்களோ, ஆட்ட சுதந்திரமோஇருக்கவில்லை. சச்சினை போல் ஆடும் வேட்கையும் இல்லை. இருவரும் அதிரடியானவர்கள்என்றாலும் சேவாகிடம் டெஸ்ட் வடிவில் சிறப்பதற்கான அந்த X-அம்சம் இருந்தது. தனது ஒருநாள் ஆட்டநிலை சுமாராகஇருப்பது சேவாகை அதிகம் பாதித்ததாக தெரியவில்லை. அவர் டெஸ் வடிவத்தில் தான் அதிககவனம் செலுத்தினார். யுவ்ராஜ் ஒருநாள் பிராந்தியத்தை வென்றடக்கிய பின் அலெக்சாண்டர்தத்துவார்த்தமாக உணர்ந்தது போல் ஒரு பிடி மண்ணை பற்றியபடி நிராசையாக நின்றார்.
கங்குலியின்ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியில் யுவ்ராஜ் தான் வெளியாள் அல்ல எனும் முயற்சியில்தன்னை சுயநிந்தனை செய்வதாகவே தெரிந்தது. அவர் கவலை மிகுந்த முகத்துடன் தனது டெஸ்ட்ஆட்டம் பற்றி அறிக்கைகள் விட்டார், கிடைக்காத வாய்ப்புகள் பற்றி விசனித்தார்,எரிச்சலுற்றார்; இவை அத்தனைக்கும் பின் இருந்தது அவநம்பிக்கையும், இல்லாத ஒன்றும்இருக்கிறது என்று நம்பும் அவரது அப்பாவிடம் இருந்து கைவரப்பெற்ற பிடிவாதமுமே. ஒருவர்அனைத்திலும் வல்லவராக இருக்க கமலஹாசன் ஒன்பது வேடங்களில் நடிக்க மட்டும் காட்டும் முனைப்புவேண்டும். தோனி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் "நான் ஒரு சிறந்த மட்டையாளனோகீப்பரோ அல்ல, நான் ஒரு பயன்மிக்க மட்டையாளன் மற்றும் கீப்பர்". இந்த தெளிவு தான் தோனியின் வலு. சேவாக் எப்படி நல்லஒருநாள் மட்டையாளர் அல்லவோ அது போல் யுவ்ராஜ் சுமாரான டெஸ்ட் வீரராகவும்இருக்கலாம். ஒன்று மேலானதாகவும் மற்றது தாழ்வானதாகவும் கருதப்படுவது பொருட்டல்ல.
2011 உலகக்கோப்பையின் போது யுவ்ராஜின் உடல்தகுதி மோசமாக இருந்தது. பல காரணங்கள்கூறப்பட்டாலும் ஆதாரமான பிரச்சனை அவரது நுரையீரல் புற்றுநோய் தான். தன்னை மீண்டும்நிரூபிக்கும் ஆவேசத்தில் அவர் அவ்விசயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. உலகக்கோப்பைமுழுக்க புற்றுநோயுடன் ஆடி அவர் தொடர்நாயகனானது ஒரு அற்புதம் மட்டுமே. மனவலிமையும்தீராத உத்வேகமும் இருந்தால் மனிதனால் நோயின் பாதிப்பில் இருந்து எளிதில்மேலெழுந்து செயல்பட முடியும் என்பதற்கான உதாரணமே அது. ஆனால் ஒரு தீயவிளைவாகயுவ்ராஜின் உடல்நிலை சீரழிந்து கொண்டே வந்தது. உலகக்கோப்பையின் போது அடிக்கடி அவர்வாந்தி எடுத்தார். குறைவாகவே உணவு எடுத்துக் கொண்டார். இது அவரது பதற்றம்காரணமாகவே என்று தோனி உட்பட பலரும் நம்பினர். கோப்பை வென்றபின் யுவ்ராஜ் சிகிச்சைமேற்கொண்டார். ஆரம்பத்தில் தனது நோயை ரகசியமாக வைத்திருந்தார். மே.இ தொடரில்இருந்து தானாகவே விலகினார். பின்னர் அவரது கடப்பாடு குறித்து கேள்வியும் கிண்டலும்எழ அவரது அம்மா வெகுண்டெழுந்து மீடியாவுக்கு உண்மையை தெரிவித்தார். மீடியா வழக்கம்போல் யுவ்ராஜின் டெஸ்ட் தோல்விகளை தற்காலிகமாக மறந்து கண்ணீர் வடித்தது.
அவருக்கு வந்துள்ளதுஒரு அரிய வகை புற்றுநோய். உடலில் தோன்றும் முதல் அணுக்களில் ஏற்படுவது. பொதுவாகபாலுறுப்புகளில் தோன்றுவது. முப்பது வயதினரில் அதிகம் காணப்படும் இந்த நோய் 5 சதம்ஆட்களுக்கு தான் நுரையீரலில் வரும். யுவ்ராஜ் அப்படி ஒருவர். இந்த வகை புற்றுநோய்எளிதில் குணப்படுத்தக் கூடியது என்றொரு கருத்து நிலவுகிறது. ஆரம்பநிலையில்சிகிச்சை மேற்கொண்டிருந்தால் யுவ்ராஜ் இந்நேரம் நன்கு குணமாகி இருப்பார். ஆனால் அவர்சிகிச்சையை தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். தொடர்ந்து கிரிக்கெட் ஆடிதன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்க விரும்பினார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும்ஒருநாள் தொடருக்கான அணியில் பங்கேற்பதற்கான இரண்டு தேர்வு ஆட்டங்கள் பெங்களூரில்நடந்தது. உடல்தகுதி தேறியுள்ளதாக அறிவித்து பிரவீன் குமாருடன் அதில் யுவ்ராஜும்பங்கேற்றார். தான் நல்ல ஆட்டநிலையில் உள்ளதாக மீடியாவுக்கு தெரிவித்தார். ஆனால்தேர்வாளர்கள் அவரை எடுக்க உத்தேசிக்கவில்லை என்று அறிந்ததும் இரண்டாவது ஆட்டம்ஆடாமல் ஊருக்கு திரும்பினார். அணி அறிவிக்கப்படும் முன்னரே போதுமான உடல்தகுதிஇல்லை என்றும், முழுநேர சிகிச்சை தேவையிருப்பதால் தன்னால் ஆட முடியாது என்றும்முன்பின் முரணாக பேட்டி அளித்தார். அப்போது பலருக்கும் எழுந்த கேள்வி அவரை ஒருவேளைதேர்ந்திருந்தால் புற்றுநோயுடன் ஆஸ்திரேலியா சென்று ஆடி தன் உடலை மேலும்சீரழித்திருப்பாரா என்பது.
யுவ்ராஜ் அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுவருகிறார்..அவர் மே மாதம் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று அவரது டாக்டர்கள்அறிவித்துள்ளனர். நோய் என்பது மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான இயற்கையின் ஒருமறைமுக சேதியும் தான். தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு சுயமான இருப்பைஏற்றுக் கொள்வதற்கான ஒரு இறுதி அழைப்பு. கீமோதெரபி போன்ற கடுமையாக உடல்வலிமையைசீரழிக்கும் சிகிச்சைகளுக்கு பிறகு அவர் உடனடியாக சூப்பர்மேன் சீருடையில் மீண்டுவர வேண்டியதில்லை. தனது சாவகாசமான இரண்டாம் வரவில் யுவ்ராஜ் இனி சாதிப்பதற்குபெரிதாக ஒன்றும் இல்லை. கடந்த காலத்தில் இளைப்பாறவும் தேவையில்லை. தன்னில் அமைதிகொண்வராக அவர் திரும்பக் வேண்டும். ஒரு விளையாட்டு கலையாக மாறுவது அப்போது தான்.(இந்த மாத அமிர்தாவில் கவர் ஸ்டோரியாக வந்த கட்டுரை)
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?