சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை.
வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்யாமல் பின்வாங்கியதால் தான் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணம்.
ஹாம்பன்டோடா துறைமுகத்தை மேம்படுத்த முதலில் இந்திய உதவியைத் தான் இலங்கை நாடியது. ஆனால், இந்தியா அதில் ஆர்வம் காட்டாததால் சீனாவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தது இலங்கை.
கச்சத் தீவை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படிதான் கச்சத் தீவு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. புலிகளை ஒழித்ததற்காக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது.
ராஜிவ் காந்தியை புலிகள் கொன்றதுதான் அவர்கள் செய்த மாபெரும் தவறு. அது அவர்களின் முட்டாள்தனம். கூலிக்காக செய்தார்களா அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது.
ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும்.
விடுதலைப் புலிகள் போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டனர். அதை எவரும் மறுக்க முடியாது.
இலங்கையில் தென் பகுதி சிங்கள மக்களின் தன்மானத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வட கிழக்குப் பகுதி தமிழ் மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தீவிரவாதம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தால் வட கிழக்கிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இலங்கை அரசை நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். வெளிநாடுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு இந்தியா கூடுதல் நெருக்கடி கொடுத்தால் இலங்கைக்கு உதவி செய்ய இன்னும் பல நாடுகள் உள்ளன.
வடகிழக்கு மக்களை விட இலங்கை வாழ் இந்திய மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். இந்தியாவின் இலங்கை கொள்கை வட-கிழக்கு பகுதிகளையே சார்ந்துள்ளது. இதை விடுத்து அந் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சித் திட்டங்களிலும் இந்தியா ஈடுபாடு காட்ட வேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து டெல்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்றார் சாமி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?