Wednesday, 15 February 2012

கல்லா கட்டும் தோனி - திரை விமர்சனம்!

 
 
 
மனைவியை இழந்து மகன், மகளோடு பட்ஜெட் வாழ்க்கை நடத்தும் பிரகாஷ்ராஜ், ரிஜிஸ்தர் ஆபீஸ் கிளர்க். சம்பளம் போதாமல் ஊறுகாய் வியாபாரம், கடன் என்று காலம் கழிக்கிறார். அவருக்கு, மகன் எம்பிஏ படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், மகனுக்கு கிரிக்கெட்டராக வேண்டும் என்பது லட்சியம். படிப்பு வரவில்லை. கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் பிரகாஷ்ராஜ், மகனை வேகமாக அடிக்க, தலையில் காயமடைந்து கோமா நிலைக்குச் செல்கிறான். பிறகு மகனை, தான் அடிக்கவில்லை, இந்த சமூகம், கல்வி முறை அடிக்க வைத்தது என்பதை உணர்கிறார். தனிமனிதனாக தன் மகனை காப்பாற்றவும், கல்விமுறையை மாற்றவும் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா என்பது கதை.



காய்கறிகாரரிடம் பேரம் பேசி பொருள் வாங்குவதும், ஆபீஸ் வேலையாக போகும்போது சொந்த வேலையையும் சேர்த்து செய்வதும், பார்க்கிறவர்களிடமெல்லாம் ஊறுகாய் விற்பதுமாக சராசரி மனிதனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். மகனுக்காக அவன் படிக்கும் பள்ளியில் கெஞ்சிக்கூத்தாடுவதும், அவனுக்காக ஆசிரியர்களிடம் கெஞ்சி டியூசன் சேர்ப்பதும், அப்படியும் படிக்காத மகனை விரக்தியில் அடிப்பதுமாக, பக்கத்து வீட்டு மனிதர்களை பிரதிபலிக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் மாஸ்டர் ஆகாஷ். 'எனக்கு மேக்ஸ் வரலைப்பா. கிரிக்கெட்தான் பிடிக்குது' என்று கெஞ்சும்போதும், கிரிக்கெட் புள்ளி விவரங்களை அள்ளி வீசும்போதும் அபாரம்.


அபார்ட்மென்டில் இருந்து கொண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்தே. 'புருஷன் ஓடிட்டான். ரெண்டு குழந்தைங்க. வயதான அப்பா அம்மா. எனக்கு வேற வழி தெரியல' என்று தன் கேரக்டருக்கு விளக்கம் கொடுப்பதும் அதுவரை வெறுத்து வந்த பிரகாஷ்ராஜ் அவளின் மனிதாபிமானத்தை நினைத்து உருகும் காட்சியும் நெகிழ வைக்கிறது. 'ஒரு கிளாஸ்ல, 40 புள்ளைங்க இருந்தா, அதுல 10 பேர் நல்லா படிப்பாங்க. மீதி 30 புள்ளைங்களும் மக்குன்னு எப்படி முடிவு பண்ணுறீங்க? அவங்ககிட்ட வேற ஏதோ திறமை இருக்கு. அதை கண்டுபிடிக்கணும், பெத்தவங்க, பள்ளி, அரசாங்கம் கண்டுபிடிக்கணும்'- என்பது உட்பட படம் முழுக்கத் தெறிக்கும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. பிரம்மச்சாரி ரிஜிஸ்தார் பிரம்மானந்தம், பிரகாஷ்ராஜ் மகள் ஸ்ரீஜிதா, கோச் நாசர் என அனைவருமே தங்கள் பங்கை சரியாகச் செய்கிறார்கள்.


இளையராஜாவின் இசை கதையின் வலுவையும், காட்சியின் வலியையும் உணர வைக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவு கச்சிதம். சமுதாயத்துக்கு தேவையான கருத்தோடு இயக்குனர் பயணத்தை துவக்கி இருக்கும் பிரகாஷ் ராஜின் முயற்சி பாராட்டுக்குரியது. டி.வி நிகழ்ச்சியிலேயே பிரகாஷ்ராஜ் ஹீரோவாவது, கிளைமாக்சில் முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சி, கந்துவட்டிகாரன் நெகிழ்ந்து திருந்துவது எல்லாமே டிராமா ஸ்டைல். இப்படி குறைகள் இருந்தாலும் படத்தின் நோக்கம் உயர்வானது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger