மரண தண்டனைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலந் தழுவிய பிரசாரம் வருகிற 20ந் தேதி (செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது என்று அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
உலகில் 3ல் 2 பங்கு நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், மரண தண்டனைக்கு எதிராக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மகாத்மாகாந்தி வாழ்ந்த இந்த நாட்டில் இன்னமும் மரணதண்டனை இருந்து வருகிறது. இந்தியாவில் மரண தண்டனையை நீக்கக் கோரியும், 3 தமிழர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க கோரியும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வருகிற 20ந் தேதி மாநிலந்தழுவிய பிரசாரம் சென்னையில் தொடங்குகிறது. இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்கிறார்.
சென்னையில் தொடங்கி காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருது நகர், திண்டுக்கல், பழனி, கரூர், சேலம், திருப்பத்தூர் வழியாக ஒரு குழு வேலூர் சென்றடையும். மற்றொரு குழு உடுமலைப் பேட்டையில் புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக வேலூர் சென்றடைகிறது.
வருகிற 20 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் பிரசாரம் அக்டோபர் 3ந் தேதி (திங்கட்கிழமை) வேலூரில் முடிவடை கிறது. இந்த பிரசாரப் பயணத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்கள். தப்பு இசை, பாடல் கள், விழிப் புணர்வு நாடகங்கள், உரை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெறும். இந்த பிரசாரப் பய ணத்தை என்னுடன், பொதுச் செயலர்கள் விடுதலை ராஜேந்திரன், கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்துவார்கள்.
பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் கண்டனத்துக்குரியது. காவல் துறையின் திறமையற்ற கையாளும் தன்மையைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் இன்னமும் பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விரிவான ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிப்போம்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வருகிற நவம்பர் மாதம் 26ந் தேதி (திங்கட்கிழமை) மிகப்பெரிய போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் என்றார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?