முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரும் முன்னாள் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், சிறீலங்கா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ தேசிய மக்கள் முன்னணியின் செயலருமான செ.கஜேந்திரன் ஈழமுரசுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இது.
எதிர்வரும் 19ம் திகதி இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள் சுவிஸ்லாந்து நாட்டில் ஒன்று கூடி பொங்குதமிழ் நிகழ்வினை நடாத்தவுள்ளனர்.
சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட யூத மக்கள் இழந்த தமது தேசத்தை மீட்டெடுத்து இஸ்ரேல் என்னும் தேசத்தை உருவாக்கும் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் டயஸ்போறா (Diaspora) என்ற சொல் பிரபல்யம் அடையத் தொடங்கியது. அந்தச் சொல் யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதென அவர்கள் கூறுகின்றனர். அதேபோல 'பொங்குதமிழ்' என்ற சொல் எதிர்காலத்தில் தமிழ் அகராதியில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழீழ தேசத்தின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் மீட்டெடுப்பதற்காக போராடும் தமிழர்கள் என்று வரைவிலக்கணப்படுத்தப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவருகின்றது.
இலங்கைத் தீவில் அந்நிய ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்கள் தனித் தேசமாகவும், தமக்கெனத் தனி இராச்சியத்தினையும் கொண்டிருந்தனர். அதேபோல சிங்கள மக்களும் கொண்டிருந்தனர். அந்நிய ஆதிக்கம் இம் மண்ணில் ஏற்பட்டபோது தமிழ் தேசம் தனது இறைமையையும் ஆட்சியுரிமையையும் அவர்களிடம் இழந்தது. அதேபோல சிங்கள தேசமும் இழந்தது.
1833ம் ஆண்டு வரை இலங்கைத் தீவை கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் தாம் கைப்பற்றிய தமிழ் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் தனித்தனியாகவே ஆட்சி புரிந்தனர். ஆனால் 1796 இல் இலங்கைத்தீவை ஒல்லாந்தர்களிடம் இருந்து கைப்பற்றி ஆங்கிலேயர் 37 வருடங்கள் தனித்தனியே ஆட்சி செய்தபோதிலும், 1833 ஆம் ஆண்டு இலங்கைத் தீவை நிர்வகிப்பதனை இலகுபடுத்துவதற்காக தமிழ் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் ஒன்றுபடுத்தி ஓரே நிர்வாக அலகாக்கினர்.
அன்று தொடக்கம் இலங்கை முழுவதனையம் ஒரு நிர்வாக மையத்தினூடாக ஆட்சி செய்து வந்தனர். இதன் காரணமாக தமிழ் தேசம் சிங்கள தேசத்திற்கு சம அந்தஸ்த்துடன் வாழ்ந்த நிலை மாற்றப்பட்டு பெரும்பான்மை சிறுபான்மை என்ற நிலை உருவாகியது. சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மை ஆக்கப்பட தமிழர்கள் சிறுபான்மைகள் ஆக்கப்பட்டனர்.
இந்நிலையில் 1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை விட்டு ஆங்கிலேயர் வெளியேறும் போது எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அன்று தொடக்கம் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களவர்கள் இலங்கைத் தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகின்றனர். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களவர்கள் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்காக மட்டும் புத்த பிரானால் அருளப்பட்ட தீவு என்று கூறும் மகாவம்சம் என்னும் புராண காவியத்தில் கூறப்பட்டுள்ள புனைகதையை உண்மை என நம்பி இந்தத் தீவை தனியான பௌத்த சிங்களத் தீவாக மாற்றும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமிழர்கள் மிகப் பெரும்பான்மை என்று கருதுகின்றனா. இதனால் இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்வது சிங்கள பௌத்தத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் என்று அஞ்சுகின்றனர். அந்த அச்சுறுத்தலை நீக்க சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பி தமிழ் இலங்கைத்தீவில் உள்ள தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் வேலையை 1948 ஆம் ஆண்டு தொடக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடராக வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பு என்று எதிர்காலத்தில் வாதிட முடியாதளவுக்கு அங்குள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதிலும் அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதிலும் இராணுவக் குடியேற்றங்களை எற்படுத்துவதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் முனைப்புக்காட்டி வந்துள்ளனர்.
அதேபோல பொருளாதார ஆதிக்கத்தினை தமிழர்களுடைய கைகளில் இருந்து சிங்களவர்களது கைகளுக்கு மாற்றும் கைங்கரியத்தினையும், மூன்றில் இரண்டு பங்கு கடல்வளத்தைக் கொண்டுள்ள தமிழரது மீன்பிடி ஆதிக்கத்தினை சிங்களவர்களது கைகளுக்கு மாற்றும் கைங்கரியத்தினையும் தமது அரச இயந்திரத்தினைப் பயன்படுத்தி கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பின்னர் இந்த நிலைமை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசு தீவிரப்படுத்திவருவதற்கு முக்கிய காரணம் தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அங்கீகாரம் சர்வதேச சமூகத்தினால் இன்னமும் வழங்கப்படாமையாகும். இந்நிலையில் மேற்கூறப்பட்ட சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் தேசத்தினை இல்லாது அழித்து விடலாம் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
அரசு எமது தேசத்தில் மேற்கொண்டு வரும் மேற்படி செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமாயின் தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதும் அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதும் சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிப்படுவதே ஒரே வழியாகும். அவ்வாறான அங்கீகாரம் கிடைத்தால் சிங்கள அரச தமது இராணுவ அதிகாரத்தையும், ஆட்சி அதிகாரததையும் பயன்படுத்தி தமிழ் தேசத்தில் சிங்கள குடியேற்றங்களை செய்வதன் மூலமும், பௌத்த கோவில்களை அமைப்பதன் மூலமும் தமிழ் தேசத்தை சிங்கள தேசமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் வரவேண்டியிருக்கும்.
அவ்வாறான அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தமிழ் தேசம் அழிக்கப்படுவதனை நிரந்தரமாகத் தடுக்க முடியும். இந்த யதார்த்த நிலையை தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற யாதார்த்தினை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கயை முன்வைத்து தொடர்ச்சியான எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இதன் மூலம் எமது தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்றக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அது மட்டுமன்றி எமது தேசத்தின் அழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், தமிழ் தேசத்தின் இறைமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற உன்னதமான போராட்டத்தில் இலட்சக்கணக்கான எமது மக்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். பல்லாயிரம் போராளிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இன அழிப்பை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்தகாலத்தில் 75000திற்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் சனல் 4 மற்றும் கெட்லைன் ருடே போன்ற ஊடகங்களும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. இவை வெளிவருவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். அதற்காக தாயகத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சர்வதேச சமூகம் இன்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் கொடுரத்தைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நீதி கொடுக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு கடுமையாக தொடர் போராட்டடங்களை ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் இடம் பெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை இப்படுகொலை தொடர்பகா சர்வதேச பக்கச் சார்ப்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.
தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு இது சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். இவை அங்கீகரிக்கப்படாத வேறு எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
சிறீலங்கா இராணுவ அடக்கு முறையை உடைத்துக் கொண்டு அடக்கு முறைக்குள் வாழ்ந்த தாயகத்து மக்களை கொதித்தெழ வைத்த வரலாற்று நிகழ்வுதான் பொங்குதமிழ். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 2001 ஆம் ஆண்டு இராணுவ அடக்குமுறையை உடைத்துக் கொண்டு பொங்கியெழுந்தனர். அந்த நிகழ்வு உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த தமிழ் மக்களை ஒரு தேசியத் தலைமையின் கீழ் ஓரணியில் திரள வைத்த வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
அன்று யாழ்பல்கலைகவளவில் கருக்கொண்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலான பொங்கு தமிழ் பின்னர் தாயகம் எங்கும் பரவி பின்னர் புலம்பெயர் தேசம் எங்கும் பரவி தமிழ் மக்களின் ஒற்றுமையின் குரலாகவும் உரிமைக் குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் தேசத்தின் இறைமைக் கோரிக்கையை வலியுறுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை தாங்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தொடாச்சியாக மேற்கொள்ள வேண்டும். தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரம் அடையும் வரை உங்கள் போராட்டங்கள் தொடர வேண்டும்...
காணொளி - அழுத்தவும்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?