நியூயார்க், ஜூன் 16-
இணையத்தின் பிரபல தேடு இயந்திரங்களில் (சர்ச் என்ஜின்) உலகின் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட்டன் வியூ பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் உழைப்பின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஐந்தரை கோடி ரூபாய்) லாபமாக கூகுள் ஈட்டி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லாபத்தில் ஒரு சிறு பகுதியாக தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களை பாசமழையில் கூகுள் குளிப்பாட்டி வருகின்றது.
சராசரியாக, இதர அலுவலகங்களில் பணி நேரங்களில் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், நாளெல்லாம் உழைத்த பின்னர் இங்கு ஓய்வு தேவைப்பட்டால், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குளுகுளு கூண்டுகளில் சிறிது நேரம் உறங்கி களைப்பாறலாம்.
பிங்பாங் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டுகள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றின் மூலம் புத்துணர்வு பெறலாம். வீட்டில் முடி வெட்டிக் கொள்ள நேரமில்லாதவர்களுக்கு இலவச கட்டிங், துணி துவைக்க முடியாதவர்களுக்கு இலவச வாஷிங், நவீன உடற்பயிற்சிக் கூடம், நீந்தி மகிழ அருமையான நீச்சல் குளம், மனம் சோர்ந்த நேரத்தில் பசுமையான புல்வெளியில் அமர்ந்தபடியே வேலை செய்யும் அனுமதி ஆகியவை இங்குள்ள பணியாளர்களுக்கு உண்டு.
மேலும், வேலை நேரத்தில் 20 சதவீதத்தை வாடிக்கையான அலுவலக பணிகள் நீங்கலாக, நீங்கள் விரும்பும் ஆய்வுப் பணிக்கென செலவிடலாம். இவ்வகையில், சம்பளத்துடன் வாரத்தில் ஒரு முழுநாளை உங்கள் சொந்த ஆய்வுப் பணிக்கென அலுவலகத்தின் உள்ளேயே செலவிடலாம்.
வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வர மட்டுமின்றி, உரிய அனுமதியுடன் சில மணி நேரம் வரை இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களை உங்கள் சொந்த வேலைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, சிறு காயம் ஏற்பட்டாலோ, நொடிப் பொழுதில் உங்கள் மேஜைக்கே வந்து கவனிக்கும் மருத்துவர் குழுவும் உண்டு.
ஏக்கர் கணக்கில் விரிந்து, பரந்து கிடக்கும் அலுவலக வளாகத்தினுள் நடந்து செல்வதற்கு பதிலாக பேட்டரிகளின் மூலம் இயங்கும் தனி மோட்டார் சைக்கிள்களையோ, குழு மோட்டார் சைக்கிள்களையோ பயன்படுத்தலாம். கழிப்பறைகள் கூட நவீன ஜப்பனிய தொழில்நுட்பத்துடன் முன்புறம், பின்புறம் என்று தனித்தனியே கழுவி விட, உலர வைக்க என்று அனைத்தும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக, இந்த வளாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபல உணவு வகைகள், திண்பண்டங்கள், நொறுக்குத் தீனி வகைகள், குளிர்பானங்கள் என எப்போதும் குறைவில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உங்களால் இயன்ற வரை ஒரு கை பார்க்கலாம். இவை அத்தனை சலுகைகளும், அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
உடல் சோர்ந்து, களைப்படைந்தால் ஒரு சிறு தொகையை கட்டணமாக செலுத்தி, தேர்ச்சி பெற்ற கலைஞர்களை வரவழைத்து மசாஜ் செய்து கொள்ளலாம். இதற்கென, தனி அறைகளும் உண்டு. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது, நமக்கும் கூகுள் நிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை கிடைக்காதா..? என்ற ஆசை யாருக்குதான் தோன்றாது..?
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?