மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மரணம்: தலைவர்கள் அனுதாபம் central minister gobinath munde dead leaders tribute
சென்னை, ஜூன்.3-
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:–
மத்திய மந்திரி கோபிநாத் முண்டே புதுடெல்லியில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற பேரதிர்ச்சித்தரும் செய்தி அறிந்து நெஞ்சம் பதறினேன். தேசத் தொண்டர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
உயரிய தொண்டுணர்வாலும், கடும் உழைப்பாலும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து பெருமைப் பெற்றவர். அவரது அகால மரணம் அவரது குடும்பத்திற்கும் பா.ஜ.கவுக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து தாளாத துக்கத்தில் வாடும் குடும்பத்தின் பெரும் துயரில் தமிழ்நாடு பா.ஜ.க. பங்கேற்கிறது.
அவரது மறைவினால் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பா.ஜ.க. கொடிகள் அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்க விடப்பட வேண்டும் என்றும் மேலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டுமென்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோபிநாத் முண்டே தில்லியில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன்.
கோபிநாத் முண்டே நாகரீகமான அரசியல்வாதிகளில் ஒருவர். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்ற அவர் தமது கடுமையான உழைப்பால் மத்திய அமைச்சர் ஆகும் நிலைக்கு உயர்ந்தார். விவசாயிகள் நலனுக்காகவும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.
சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுத்தவர். அவரது மறைவு பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதாக் கட்சியினருக்கும் பா.ம.க. சார்பில் இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:–
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், இந்நாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலையில் டில்லி விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்தில் உயிர் நீத்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
அவரது மைத்துனரான பிரமோத் மகாஜன் மத்திய அமைச்சராக பணியாற்றிய காலங்களில் நான் கோபிநாத் முண்டே சந்தித்து இருக்கிறேன். கடந்த 26 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்ற ஒரு வார காலத்திற்குள் கோபிநாத் முண்டே விபத்தில் பலியான செய்தி அவரது துணைவியாருக்கும், மூன்று புதல்வியருக்கும், குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தாங்க முடியாத பேரிடியாகி விட்டது.
அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:–
மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியினைகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மகாராஷ்டிரா மாநில அரசியலில் தனது அயராத உழைப்பால் மக்கள் தலைவராக உயர்ந்தவர்.
மாற்றாரும் மதிக்கும் வண்ணம் அரசியலில் தூய்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர். மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருந்த நேரத்தில் ஏழை, எளியமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பலநல்லதிட்டங்களைதீட்டி, முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். எந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் முழுமனதோடுநேரம், காலம் பாராமல் மக்களுக்காக உழைத்தவர். தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் டெல்லி சென்றபோது, என்னிடத்தில் எளிமையாக பேசிப்பழகியவர். நட்புடன் பழகுவதற்கு இனிமையானவர். அவரின் திடீர்மறைவு எனக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினருக்கும், பாரதீயஜனதாகட்சிக்கும், இந்தியமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது ஆன்மாசாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம்:–
மத்திய ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே டெல்லியில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் என்னும் தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் முண்டே அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கபட்டவர். 1995 முதல் 1999 வரை மராட்டிய மாநிலத்தின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றியவர்.
பார்ப்பதற்கும், பழகுவதற் கும் மிகவும் எளிமையானவர், இனிமையானவர், நிர்வாக திறன்மிக்கவர், நற்பண்பு களின் இருப்பிடமாக திகழ்ந்த வர். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், பாரதீய ஜனதா கட்சியினருக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்:–
புதிதாக நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த கோபிநாத் முண்டே விபத்தில் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் அன்பை பெற்றதலைவர். இந்திய நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நல்ல சிந்தனைகளை தனது அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்த இருந்த அவரது மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?