விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்..!
சுடுநீர் குளியல்: பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.
உள்ளாடை: அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.
மொபைல்: பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம்: மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
போதிய உடலுறவு இல்லாமை: உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
ஆல்கஹால்: ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல்: சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
சோயா பொருட்கள்: ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.
டிவி பார்த்தல்: பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும்ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது.
லேப்டாப்: தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?