பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி parliament election admk party support panruti ramachandran interview
சென்னை, ஜன 26–
தே.மு.தி.க. அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, தமிழக அரசு அவருக்கு அண்ணா விருது வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு பேறிஞர்அண்ணா விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
''அண்ணா மீது ஈடுபாடு கொண்டிருந்ததால் அரசியல் வாழ்விற்கு உந்தப்பட்டேன். இதனால் நான் வேலை பார்த்து வந்த உதவிப் பொறியாளர் பதவியை 1964–ம் ஆண்டிலேயே ராஜினாமா செய்தேன்.
அண்ணா தலைமை ஏற்று அரசியலில் ஈடுபட்டேன். அவரது எண்ணங்களுக்கும் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பாடுபட்டேன். இதற்கு மதிப்பளிக்கும் வகையில் அண்ணா விருது எனக்கு கிடைத்துள்ளது.
அண்ணாவை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம் என்ற வகையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். என்னைப் போன்ற எண்ணற்ற அண்ணாவின் தம்பிகளுக்கு முதல்–அமைச்சர் நம்பிக்கை ஒளி ஏற்றுவார் என நம்புகிறேன்.
எந்தெந்த லட்சியங்களுக்காக அண்ணா தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அதேபோல் முதல்–அமைச்சரும் தனது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– அண்ணா விருது கிடைத்துள்ளதால் இதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்று கருதுகிறீர்களா?
பதில்:– எதற்கும் அரசியல் சாயம் பூசத்தான் செய்வார்கள். பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழியில் அரசியல் நடத்திய எனக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கே:– அண்ணாவின் கொள்கைகளை எப்படி பரப்புவீர்கள்?
ப:– 1967 பொங்கல் மலரில் அண்ணா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் கூறும் போது, வெள்ளம் எல்லோரையும் அழிக்க கூடியது. ஆனால் வாய்க்கால் தண்ணீர் அனைவருக்கும் வளம் அளிக்க கூடியது.
இந்த வாய்க்கால் போன்ற சிந்தனையால் அனைவருக்கும் செல்வ செழுமை கிடைக்க பாடுபட வேண்டியது நமது கடமை. இதற்கு சம தர்ம லட்சியத்தை உருவாக்கிட வேண்டும். செல்வம் ஒரே இடத்தில் சேர்ந்தால் அது வெள்ளம் போன்று அழிக்க கூடியது.
இந்திய மக்கள் தொகையில் பாதிபேரின் வருமானத்தை மேல் மட்டத்தில் உள்ள 3 சதவீதம் பேர் பெறக் கூடியது சூழல் உள்ளது. அந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு உள்ளது. இந்த நிலை மாற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அதை குறிக்கோலாக கொண்டு இயங்க வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார். அந்த வகையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி கட்சிகள் முற்போக்கு கொள்கைக்காக பாடுபடுகிறது. யார் நல்ல கொள்கைகளை கொண்டு வருகிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.
கே:– அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
ப:– ஆமாம். நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எண்ணை சட்டியில் இருந்து தப்பிக்க எரி நெருப்பில் விழுந்த கதையாக ஆகி விடக் கூடாது. எனவே ஏழை எளிய மக்களுக்காக யார் பாடு படுகிறார்களோ அவர்களை ஆதரிக்க அனைவரும் முன் வரவேண்டும், இந்திய அரசியலில் நல்ல மாற்றம் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?