Img பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview
மேல்புறம், டிச.29–
பாரதீய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரத்தினமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:––
தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து ஆகியோர் பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசி விட்டனர். பா.ம.க.வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி. அந்த கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என நம்புகிறோம். அப்படி கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்.
அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இன்று தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. நாளை திடீரென கூட்டணி என்று பேசுவார்கள். அவர்களது முடிவுகளை புரிந்து கொள்ள முடியாது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் 1½ லட்சம் தமிழகர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து விதவைகள் ஆனார்கள். 50 ஆயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆனது. அங்குள்ள தமிழர்களின் உடமைகள், நிலங்கள், வீடுகள் இலங்கை அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தமிழர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக மீனவர்களை நிம்மதியாக கடலுக்கு போய் மீன் பிடிக்க விடாமல் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கடலோர கிராமங்களில் ஒரு ஓட்டு கூட விழாது.
ப.சிதம்பரம் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியாக பதவி வகித்துள்ளார். ஆனால் அவரால் தமிழகத்துக்கோ, அவரது தொகுதிக்கோ ஒரு நன்மையும் கிடைக்க வில்லை. தமிழகத்தில் ஒரு வளர்ச்சித்திட்ட பணிகள் கூட அவரால் செய்யப்படவில்லை.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடினார். தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளார். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரே வெளியே வருவார்.
குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்து மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறுகையில் சிறிய துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி உள்ளார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குளச்சல் பெரிய வர்த்தக துறைமுகமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?