Salem Tamil teacher harassment to students blockage in jail
சேலம் அம்மாப்பேட்டை சிவாஜி நகரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார்.இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போதும், மற்ற நேரங்களிலும் சில மாணவிகளை தொட்டு சில்மிஷம் செய்வதும், பேசுவதும், தவறான வார்த்தைகளை கூறுவதும் என பாலியல் ரீதியாக அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என்றும் ஆசிரியர் பத்மநாபன் மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவிகள் வெளியில் சொல்லவில்லை. ஆனாலும் நாளுக்கு நாள் ஆசிரியர் பத்மநாபனின் தொல்லை அதிகரித்ததால் வேறு வழியே இல்லாமல் மாணவிகள் சிலர் பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர்.
இது குறித்து சில மாணவிகளின் பெற்றோர் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவகி பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்த சம்பவங்களை எழுத்து மூலமாக எழுதிகொடுத்தனர்.
விசாரணையில் தமிழ் ஆசிரியர் பத்மநாபன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்தது உறுதியானது. இதையடுத்து நல அலுவலர் தேவகி தலைமை ஆசிரியரை சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறினார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த பாலியல் புகார் கூறப்பட்ட தமிழ் ஆசிரியர் பத்மநாபன் ஓடிச்சென்று தலைமை ஆசிரியர் அறைக்குள் ஒளிந்து கொண்டார். அப்போது மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முதலில் தவறு செய்த ஆசிரியரை வெளியே இழுத்து வாருங்கள் என்று கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுப்பற்றி தகவல் தெரிந்து அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெற்றோரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து மாணவிகள் சில்மிஷம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தமிழ் ஆசிரியர் பத்மநாபனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சில்மிஷ ஆசிரியருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?