கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் தமிழகத்தில் மின் வெட்டு சரியாகிவிடும் என்று தமிழக அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. மாநிலத்தின் மின் நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் பாமக சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் நாங்கள்தான் எதிர்கட்சியாக இருந்திருப்போம்.
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். சென்னையில் 4 மணி நேரமும் மற்ற பகுதியில் 15 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும். தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், தற்போது 7500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. 4500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.
கூடங்குளத்தில் முதல்கட்டமாக 640 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள். இதில் 220 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்கும். இதை வைத்து மின் தட்டுப்பாட்டை எப்படி போக்க முடியும்?.
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் மின் வெட்டு சரியாகிவிடும் என்று தமிழக அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. மின் நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள்-அமைச்சர்:
இந் நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளிக்கையில்,
பல்வேறு இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பல இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்து தேவையான இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
தானே புயல் வீசிய இடங்களில் ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விட்டன. எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின் கம்பங்களை அங்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் மின் கம்பங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக மின் கம்பம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மின் கம்பங்கள் வழங்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?