கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் நிதி அளிக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்கா.
பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வெளி வருகிற 'சயின்ஸ்' பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், இந்தியா வளர்ச்சி குறித்த சவால்களை எதிர்கொண்டிருக்கிற நிலையில், அதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளைப் பெறுகிற தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும், கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறைவேற்றுவதில் இடைïறுகள் எழுந்து இருப்பதாகவும், இதற்கு பெரும்பாலும் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிற இத்தகைய தொண்டு நிறுவனங்கள்தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.
அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நிதி உதவி வருவதாக பிரதமர் அலுவலக இணை மந்திரி நாராயணசாமியும் உறுதி செய்தார். ஆனால் பிரதமரும் சரி, அமைச்சரும் சரி பணம் வந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளிப்படையாக தெரிவி்க்கவில்லை.
அதைத் தொடர்ந்து தேச நலனுக்கு எதிராக செயல்படுவதாக சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள 77 தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி மத்திய அரசின் உள்துறை ஆராய்ந்து வருகிறது. மேலும் 4 தொண்டு நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மறுப்பு
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட், வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறுகையில், "பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதே நேரத்தில் அணு மின் சக்தித்துறையில் இந்தியாவின் முதலீட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்பதை நீங்கள் (நிருபர்கள்) அறிவீர்கள்.
இந்திய அரசு மேற்கொண்டு வருகிற சிவில் அணுசக்தி திட்டத்துக்கு நாங்கள் ஆதரவானவர்கள். நாங்கள் நிதி உதவி அளிக்கிற தொண்டு நிறுவனங்களும்கூட மக்களாட்சி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றில்தான் ஈடுபடுகின்றன.
(கூடங்குளம் உள்ளிட்ட) இந்திய அணுமின்சக்தி திட்டத்துக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நாங்கள் சாதகமாக செயல்படுவதில்லை (நிதி அளிப்பதில்லை). தொண்டு நிறுவனங்களுக்கான எங்கள் ஆதரவு எல்லாம் வளர்ச்சிக்கானது, ஜனநாயக ரீதியிலான திட்டங்களுக்கானதுதான்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?