திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பிளெக்ஸ் போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி விஜய் மக்கள் இயக்க தலைவர் பலியானார், இன்னொருவர் படுகாயமடைந்தார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது 60வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி பொள்ளாச்சி-கோவை சாலைபி.எஸ்.என்.எல். அலுவலகத்தையொட்டி உள்ள காலி இடத்தில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 30 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பிளெக்ஸ் போர்டு வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தனியார் பிளெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த திலக் குமார் (21),அலெக்ஸ் பாண்டியன், அழகப்பா காலனியைச் சேர்ந்த ஆபித் ரகுமான், குமரன் நகர் முருகேசன், சுல்தான் ஆகியோர் 5 பேர் பிளக்ஸ் போர்டு வைக்க அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது திலக்குமார், அபித் ரகுமான் ஆகியோர் அந்த போர்டை வைக்க நடப்பட்டிருந்த மரக்கம்பின் உச்சிக்கு சென்று போர்டை நேராக வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பிளெக்ஸ் போர்டில் இருந்த இரும்புக் குழாய் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரின் மின் கம்பியில் பட்டது. இரும்புக் குழாயில் மின்சாரம் பாய்ந்ததில் திலக் குமாரும், ஆபித் ரகுமானும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திலக் குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த ஆபித் ரகுமான் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த திலக் குமார் நடிகர் விஜயின் மகக்ள் இயக்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு கூடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?