Friday 16 March 2012

அப்பாடா, ஒருவழியாக 100வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!

 
கடந்த ஓராண்டிற்கு மேலாக 100வது சதமடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியி்ல் ஒரு வழியாக அந்த மைல்கல்லை எட்டினார். துவக்க முதலே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 138 பந்தில் 100 ரன்கள் எடுத்தார்.




கிரிக்கெட் உலகில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அரங்கில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர், இரண்டிலும் அதிக ரன்களை எடுத்தவர், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள் என்று நீண்ட சாதனைப்பட்டியல் வைத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர்.

இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 51 சதம், 65 அரைசதம் உட்பட மொத்தம் 15,470 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 55.44 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 48 சதங்கள், 95 அரைசதங்கள் உட்பட 18,111 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 45.16 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் சச்சின் தனது 99வது சதத்தை அடித்தார். ஆனால் அதன்பிறகு பல டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றாலும் அவரால் 100வது சதம் சாதனையை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இன்றைய போட்டியில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டு வந்திருந்த அவர் துவக்கத்தில் இருந்தே பொறுமையாக ஆடினார். அரைசதத்தை கடந்த அவர் 138வது பந்தில் சதமடித்து சாதனை படைத்தார். இது ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடிக்கும் 49வது சதமாகும்.

2,000வது பவுண்டரி:

சச்சின் இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸ்சும் அடித்தார். அதில் முதல் பவுண்டரியை அடித்தபோது ஒருநாள் போட்டியில் 2,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சாமி கும்பிட்ட ரசிகர்கள்:

கடந்த ஓராண்டாக 100வது சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்றைய போட்டியில் அச்சாதனையை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மைதானத்தில் சாமி கும்பிட்டனர். அவர் சதமடித்த உடன் சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
Tags - Sachin , Cricket , 100 century , sachin century news

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger