ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை கொல்ல செசன்ய தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் தீவிரவாதிகள் என்பதும், அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக குண்டு வெடித்து விட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதானவர்களில் மட்யேவ் என்பவன் ரஷ்யாவை சேர்ந்தவன். இன்னொருவன் பியான்சின். இருவரும் துருக்கியில் இருந்து அரபு எமிரேட் நாடு வழியாக உக்ரைன் வந்ததாக கூறினர். மேலும், ரஷ்யாவை சேர்ந்த செசன்யா தீவிரவாதி டோக்கு உமரோவ் உத்தரவுப்படி, பிரதமர் புடினை கொலை செய்ய சதி திட்டம் வகுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த 2 தீவிரவாதிகளும் தற்கொலை படையாக உருவெடுத்து, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் முடிந்ததும் புடினை கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.
இதையடுத்து, ரஷ்ய உளவு படையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியை ரஷ்யாவில் 'சேனல் ஒன்' என்ற டி.வி. நேற்று வெளியிட்டது. இதனால், ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?