
இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உகண்டா, மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத், கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன என்று அறிய முடிகின்றது.
ஜெனிவா விரைந்துள்ள இலங்கை அமைச்சர்கள் குழாம், தமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மேற்குலகத்திடம் இருந்து அக்குழுவிற்கு சாதகமானதொரு பதில் கிட்டவில்லை என்றே ஜெனிவாவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது மார்ச் 23 ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரியவருகின்றது.
மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையில் முக்கியமான சில விடயங்களைப் பரிந்துரைப்பதற்கும் மேற்குலக நாடுகள் தீர்மானித்துள்ளன என அறியக்கூடியதாகவுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?