மது குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்த ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 450 குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் ஒரிசாவின் பெலாங்கீர் மாவட்டம், கோன்கூடாவைச் சேர்ந்த சதா ராணா(35) தனது குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இவருடன் மனைவி புஷ்பா(32), மகன்கள் ஜெயந்து(7), ஸ்ரீவன்து(3), மாமியார் சுபிதா(60) ஆகியோர் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் குடிப்பழக்கமுள்ள சதா குடிப்பதற்காக பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் வார சம்பளத்தை பெற்ற அவர் அதில் பெரும் பகுதியை குடித்தே தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கோடாரியால் புஷ்பாவின் சரமாரியாக வெட்டினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது தாய் சுபிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா உயிரழந்தார். அதற்குள் ராணா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போந்தவாக்கம் கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ், ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், ஆரணி சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, தட்சணாமூர்த்தி, ஏகாம்பரம் மற்றும் போலீசார் புஷ்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சதா ராணாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் மீது மனைவியை கொடுமைப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?