Tuesday 21 February 2012

லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை

 
 
 
லஞ்ச ஊழல் ஒழிப்பு, அவரவர் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்; குழந்தைகள், பெற்றோரிடம் இதை வலியுறுத்த வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசினார்.
 
கோவை, காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்ற, சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேச பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிட்டல் (கே.எம்.சி.எச்.,) மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி வரவேற்றார். கே.எம்.சி.எச்., சேர்மன் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:
 
மாணவர்கள், வாழ்க்கையில் மூன்று பேரை, முக்கியமாக பின்பற்ற வேண்டும். தாய், தந்தை மற்றும் ஆரம்பக் கல்வி அளிக்கும் ஆசிரியர். தாய், தந்தையர், ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர், ஒழுக்கத்தைப் போதிப்பவராக இருக்க வேண்டும். அறிவே, மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். அறிவால், எதையும் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். என்னாவாக விரும்புகிறோம் என நினைக்கிறோமோ, அதை அடையும் வல்லமை படைத்தது. தடைகளை எல்லாம், உடைக்கக்கூடிய ஆற்றல் பெற்றது, அறிவு.இந்தியா ஆற்றல் மிகுந்த நாடாக மாற வேண்டும் என்றால், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைய வேண்டும். தூய்மையான குடிநீர், சரிசம மின்சக்தி கிடைக்க வேண்டும். இந்தியாவை மாற்ற, அனைவரும் உழைக்க வேண்டும். விவசாயம், தொழில்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்க அனைவரும் உழைக்க வேண்டும். வறுமை, நோய் இல்லாத கிராமங்கள் உருவாக வேண்டும்.ஒவ்வொரு மாணவருக்கும் தலைமைப் பண்பு அவசியம். தொழில் நுட்பங்கள் நிறைந்த உலகில், சுகாதாரம் மிகவும் அவசியம். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
 
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அப்துல் கலாம் பேசியதாவது:
 
நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை, ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி, அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும். ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. 40 கோடி மாணவர்கள் உள்ள இந்த நாட்டில், இவ்வாறு அனைவரும் கூறினாலே, பெருமளவு லஞ்ச ஊழல் மறைந்து விடும்.இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger