சட்டசபையில் அ.தி.மு.க-வுடன் உரசல்… ஸ்டாலினுடன் ஏர்போர்ட் சந்திப்பு போன்ற பரபரப்புக்குப் பின் கூடிய தே.மு.தி.க. பொதுக் குழு இன்னும் கூடுதல் பரபரப்பைக் கிளப்பியது. வழக்கமாக, அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வானகரம் ஏரியாவில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்திலேயே தே.மு.தி.க-வின் பொதுக்குழுவும் இந்த முறை கூடியது. செல்போன், கேமரா எதுவும் கொண்டுவரக் கூடாது என்று ஏக கெடுபிடிகள். மண்டபத்தை சுற்றிலும் சஃபாரி அணிந்த 'ரமணா' படை நின்று, எல்லோரையும் சல்லடை போட்டுத்தான் உள்ளே அனுப்பினார்கள். மீடியாவுக்கும் தடா. உள்ளே நடந்ததை அப்படியே வெளியே வந்து கொட்டினார்கள் சில நிர்வாகிகள்.
இரட்டைப் பதவி!
முதலில் செயற்குழு கூடியது. கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டது. திடீரென்று இரட்டைக் குதிரையில் சவாரி ஏனாம்?
"ராமு வசந்தன் இறந்ததும் காலியாக இருந்த அந்தப் பதவிக்காக, தலைமைக் கழக நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டார்கள். இதைவைத்து நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்க முடியுமா என்று ஆளும் கட்சி திட்டம் போட்டது. அதனால்தான், விஜயகாந்த் அந்தப் பதவியை தன்னிடமே வைத்துக்கொண்டார்" என்கிறார்கள்.
கேசட் ஆதாரம்!
பொதுக்குழுவின் ஹைலைட் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் பேச்சுதான். "ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுதான் ஜெயலலிதாவின் வாடிக்கை. பஸ் கட்டண உயர்வு, பால் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்காக சட்டசபையில் குரல் கொடுத்தால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. மக்கள் பிரச்னையைப் பேசும் அவையில், தனியாக நிற்கத் திராணி இருக்கிறதா, தைரியம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கிறார். கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டி இட்டது தே.மு.தி.க. ஆனால், ஐந்து இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள். அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி வைக்கா விட்டால், அந்த அம்மா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க முடியுமா? தே.மு.தி.க-வோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் மூன்று பேர் அப்போது கேப்டனை சந்திக்க வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்கள் என்னென்ன பேசி னார்கள். நம்மோடு கூட்டணி சேர்வதற்காக எப்படி அலைந்தார்கள். எப்படி எல்லாம் இறங்கி வந்தார்கள். காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள். என்னென்ன பேசினார்கள் என்று அவ்வளவையும் பதிவுசெய்து வைத்திருக்கிறோம். இனியும் எங்களைச் சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடுவோம்" என்று அனல் பறக்கப் பேசி முடிக்க, கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.
விஜயகாந்தின் விளாசல்!
இறுதியாகப் பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க-வுடன் தி.மு.க-வையும் சேர்த்தே விளாசினார். 'அடுத்து தி.மு.க-வோடு கூட்டணி' என்ற எழுந்திருக்கும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அப்படிப் பேசினாராம்.
"அ.தி.மு.க. ஆட்சியின் 100-வது நாளில் என்னைப் பாராட்டி பேசச் சொன்னார்கள். நான் பேசவில்லை. கூடங்குளம் அணுமின் பிரச்னையில் அந்தப் பகுதி மக்கள் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை நேரில் போய் இந்த அம்மா ஏன் பார்க்கவில்லை? கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. கூடங்குளம் பகுதியில் மண் அள்ளும் மனிதருக்கு ஆதரவாகத் தமிழக அரசு செயல்படுவதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் தேர்தல் செலவுக்காக அந்த மனிதர் கொடுத்திருக்கிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை ஆளும் கட்சி செய்வதாக சந்தேகம் ஏற்படுகிறது. அது நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்.
நேற்று, சட்டசபைக்கு நான் ஒருவன் மட்டுமே போனேன். இன்று 29 பேர் போயிருக்கிறோம். நாளைக்கு எத்தனை பேர் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நிச்சயம் நாம் ஆட்சியைப் பிடிப்போம்" என்று சூளுரைத்தார்.
இப்போது, நீதிமன்றம் மூலமாகவும் அ.தி.மு.க-வுக்கு தே.தி.மு.க. குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டதால், தமிழக அரசியல் களை கட்டும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?