Sunday, 25 December 2011

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்த திட்டம்

 
 
தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
 
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகெடுவை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் பல இடங்களில் ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்து இருந்தால் அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை.
 
இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ளது. போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கும் நிலையும் உள்ளன. இந்த குறைபாடுகளைக் களைய தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ், கைகளின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி உள்ளிட்டவை பதிவு செய்து, பிரத்யேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்ற வருகின்றது.
 
இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி, மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் பல ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்வதும், போலி ரேஷன் அட்டைகளும், ரேஷன் கடைகளில் போலி பட்டியலிடுவதும் தடுக்கப்படும்.
 
இந்த மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்குவதற்குச் சில காலம் ஆகும் என்பதால், இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை 2012, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். செல்லுபடியாகும் காலம் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பெயர் நீக்கம், சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் வழக்கம் போல நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger